ராஜ்நாத்சிங்குடன் குமாரசாமி சந்திப்பு குடகு மாவட்ட மழை வெள்ள சேதத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்க கோரிக்கை
டெல்லி சென்ற முதல்-மந்திரி குமாரசாமி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை நேற்று சந்தித்து பேசினார்.
பெங்களூரு,
டெல்லி சென்ற முதல்-மந்திரி குமாரசாமி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை நேற்று சந்தித்து பேசினார். அப்போது குடகு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களை சீரமைக்க உடனடி நிவாரணமாக ரூ.2,000 கோடி நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் மற்றும் மந்திரிகள் டெல்லி சென்றனர்.
உடனடி நிவாரணம் ரூ.2,000 கோடி
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார். துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் மற்றும் மந்திரிகள் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது, குடகு உள்பட மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.2,000 கோடி வழங்க கோரி ராஜ்நாத்சிங்கிடம் குமாரசாமி இடைக்கால மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
“குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு உள்பட பல்வேறு குழுக்களை கர்நாடகத்திற்கு அனுப்பி உதவியதற்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடகத்தில் குடகு மற்றும் மலைநாடு, கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்தது.
65 பேர் மரணம்
இந்த மழையால் பயிர்கள், கட்டிடங்கள், வீடுகள் சேதம் அடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. முதல்கட்ட ஆய்வின்படி இந்த மழையால் 65 பேர் மரணம் அடைந்தனர். 165 கால்நடைகள் செத்துபோய் உள்ளன. 5,500-க்கும் அதிகமான வீடுகள் இடிந்துவிட்டன. 2,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. குடகு உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது.
மழை காலம் முடிந்த பிறகே முழுமையான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சேதங்கள் குறித்து இறுதி அறிக்கை தயாரிக்கப்படும். தற்போது மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் இறுதியானவை அல்ல. முதல்கட்ட ஆய்வின்படி ரூ.3,435.80 கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
மத்திய குழுவை அனுப்ப வேண்டும்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ள உடனடி நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்க வேண்டும். இதற்கிடையே மாநில அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.49 கோடியும், மாநில அரசின் பொது நிதியில் இருந்து ரூ.200 கோடியில் ஒதுக்கப்பட்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேதங்களை மதிப்பிட ஒரு மத்திய குழுவை கர்நாடகத்திற்கு அனுப்ப வேண்டும். எந்தவித காலதாமதமும் செய்யாமல் உடனடியாக மேலே குறிப்பிட்டுள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story