லாரி மோதியதில் மொபட்டில் சென்ற 4 வயது சிறுவன் பலி தாய் கண்முன்னே நடந்த கொடூரம்


லாரி மோதியதில் மொபட்டில் சென்ற 4 வயது சிறுவன் பலி தாய் கண்முன்னே நடந்த கொடூரம்
x
தினத்தந்தி 31 Aug 2018 4:15 AM IST (Updated: 31 Aug 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் தனது தாய் கண் முன்னே பரிதாபமாக இறந்தான்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். கொத்தனார். இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர்களுடைய 4 வயது மகன் முகுந்தன். கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முகுந்தன், யு.கே.ஜி. படித்து வந்தான்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் முகுந்தனை அவனுடைய தாயார் புவனேஸ்வரி தனது மொபட்டில் வீட்டுக்கு அழைத்து சென்றார். செட்டிமண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி, மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் முகுந்தன் தனது தாய் புவனேஸ்வரியின் கண்முன்னே அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

படுகாயம் அடைந்த புவனேஸ்வரியை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து லாரியின் முன் பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனர். விபத்து குறித்து கும்பகோணம் நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

விபத்தில் 4 வயது சிறுவன் தனது தாய் கண் முன்னே பலியான கொடூர சம்பவம் கும்பகோணம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story