என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது


என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது
x
தினத்தந்தி 31 Aug 2018 4:30 AM IST (Updated: 31 Aug 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் நேற்று சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. முதல் நாளான நேற்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா சாட்சியம் அளித்தார்.

நாமக்கல்,

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை மற்றும் அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்ற சிவக்குமார், கார் டிரைவர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும், அவரது டிரைவர் அருண் கோவை சிறையிலும், யுவராஜின் சகோதரர் தங்கதுரை உள்ளிட்ட 12 பேர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் இருந்த அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜோதிமணி (40) என்ற பெண் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாகி விட்டார். செல்வராஜ் ஐகோர்ட்டு ஜாமீனில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் கடந்த 11-ந் தேதி நாமக்கல் முதன்மை கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது அனைவர் மீதும் குற்றவரைவு சுமத்தப்பட்டது. இதையடுத்து நீதிபதி இளவழகன், 30-ந் தேதி அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அன்று முதல் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான சாட்சிகளிடம் விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. இதையடுத்து யுவராஜ் உள்ளிட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 14 பேரையும் போலீசார் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். இதேபோல் ஜாமீனில் உள்ள செல்வராஜூம் கோர்ட்டில் ஆஜரானார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாயார் சித்ரா உள்பட மொத்தம் 110 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் நேற்று விசாரணை தொடங்கியது. முதல்நாளான நேற்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது கோகுல்ராஜ் அணிந்திருந்த ஆடைகளை அவரிடம் காட்டி, உறுதிப்படுத்திக் கொண்டனர்.

முன்னதாக நீதிமன்றத்தில் கூண்டில் நின்று சாட்சியம் அளித்த கோகுல்ராஜின் தாயார் சித்ரா, குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோரை பார்த்து ஆவேசமாக பேசினார். மேலும் அவ்வப்போது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அழுதுகொண்டே சாட்சியம் அளித்தார்.

முதல்கட்டமாக மதியம் 1.05 மணிக்கு தொடங்கிய விசாரணை 1.40 மணி வரையிலும், அடுத்து 2.50 மணிக்கு தொடங்கிய விசாரணை 3.05 மணி வரையிலும் நடந்தது. உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த சித்ராவை அவ்வப்போது நீதிமன்றத்திற்கு வெளியில் அழைத்துச்சென்று, சிறிது நேரத்திற்கு பிறகு அழைத்துவர போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

அரசு தரப்பு சிறப்பு வக்கீல் கருணாநிதி, சித்ராவிடம் கேள்விகளை கேட்டார். அதற்கு சித்ரா அளித்த பதில் விவரங்கள் நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்டது.

உணவு இடைவேளைக்கு பிறகு விசாரணை தொடங்கியபோது, யுவராஜ் தரப்பினரை கூண்டில் நின்று கொண்டு ஆவேசமாக பேசியது குறித்து சித்ராவிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிமன்ற வளாகத்தில் உணர்ச்சி வசப்படக்கூடாது, ஆவேசமாக பேசக்கூடாது, கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுபோல் மீண்டும் நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரை எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து விசாரணையை வருகிற 1-ந் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். மேலும் நாளை யுவராஜ் தரப்பில் இருந்து குறுக்கு விசாரணை நடைபெறும் எனவும் உத்தரவிட்டார்.

இதேபோல் நீதிமன்றத்திற்கு வெளியிலும் யுவராஜ் தரப்பினரை நோக்கி கோகுல்ராஜ் உறவினர்கள் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

Next Story