திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆவணி திருவிழா கொடியேற்றம்அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
பின்னர் கொடிப்பட்டம் கோவிலில் இருந்து புறப்பட்டு, 9 சந்திகளுக்கும் வீதிஉலா சென்று, மீண்டும் கோவிலுக்கு வந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை 5.40 மணிக்கு கோவில் 2–ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில், காப்பு கட்டிய சிவசுப்பிரமணிய பட்டர் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கொடியேற்றினார்.
தீபாராதனைதொடர்ந்து கொடிமர பீடத்துக்கு எண்ணெய், தைலம், திரவிய பொடி, மஞ்சள் பொடி, மாபொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. காலை 6.40 மணிக்கு கொடிமரத்துக்கு சோடஷ தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் காஞ்சீபுரம் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமி, கோவில் இணை ஆணையர் பாரதி, ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டி நாடார், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி, கோவில் உள்துறை கண்காணிப்பாளர்கள் மகாமுனி, சொர்ணம், வெள்ளைச்சாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி–அம்பாள் வீதிஉலாமாலையில் அப்பர் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவில் சேர்ந்தார். இரவில் ஸ்ரீபெலிநாயகர் அஸ்திர தேவருடன் யானைத்தந்த பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு, 9 சந்திகளிலும் உலா வந்து கோவில் சேர்ந்தனர்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி–அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவு, கருத்தரங்கம், தேவாரம், திருப்புகழ், பக்தி இன்னிசை, பரதநாட்டியம், திருவாசகம் முற்றோதுதல், வீணை, கிளாரினெட் இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.
8–ந்தேதி, தேரோட்டம்5–ம் திருநாளான வருகிற 3–ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு சுவாமி–அம்பாளுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடக்கிறது. 7–ம் திருநாளான 5–ந்தேதி (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவப்பு நிற பட்டு உடுத்தி, சிவன் அம்சமாக தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 8–ம் திருநாளான 6–ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி வெண்பட்டு அணிந்து பிரம்மன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
தொடர்ந்து மதியம் சுவாமி பச்சை நிற பட்டு உடுத்தி, பெருமாள் அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10–ம் திருநாளான 8–ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.