அம்பை அருகே ரெயில்வே தரைப்பாலம் அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
அம்பை அருகே ரெயில்வே தரைப்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பை,
அம்பை அருகே ரெயில்வே தரைப்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயில்வே தரைப்பாலம்நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி காட்டு மன்னார்குளம் கோவில் திம்மராஜபுரம் பகுதியில் கன்னடியன் வாய்க்கால் பாலத்திற்கும், தாமிரபரணி ஆற்று பாலத்திற்கும் இடையே ஆளில்லா ரெயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியில் ரெயில்வே தரைப்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் இங்கு தரைப்பாலம் அமைத்தால் மழைக்காலங்களில் நீர் தேங்கி தொற்றுநோய் ஏற்படும், அவசர காலங்களில் வாகனங்கள் ஊருக்குள் வர முடியாது. மேலும் இந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளதால் அறுவடை காலங்களில் சிரமம் ஏற்படும் எனவே இந்த பகுதியில் தரைப்பாலம் அமைக்க கூடாது என்று கூறி நெல்லை கலெக்டர் ஷில்பாவிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பொதுமக்கள் முற்றுகைஇந்த நிலையில் நேற்று தரைப்பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட ரெயில்வே கட்டிட பிரிவு தலைமை என்ஜினீயர் அஜித் சிங்கால், உதவி என்ஜினீயர் சுசீந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த, காங்கிரஸ் நகர தலைவர் கைகொண்டார், விவசாய சங்க பிரதிநிதிகள் கண்ணன், முத்தையா, செந்தில் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று, அதிகாரிகளை முற்றுகையிட்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்புஅப்போது அதிகாரிகள் கூறுகையில், இந்த பாலத்தால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த பாலம் 15 அடி உயரத்தில் கட்டப்படும். இந்த பகுதியில் தேங்கும் மழைநீர் மோட்டார் அமைத்து அகற்றப்படும் என்றனர். இருப்பினும் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள் நீங்கள் இதுகுறித்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளியுங்கள் என்று கூறினர். உடனே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.