ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய தமிழில் படிவம் வழங்க வேண்டும்: மத்திய மந்திரிக்கு, சிஸ்மா கோரிக்கை
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய தமிழில் படிவம் வழங்க வேண்டும் என மத்திய மந்திரிக்கு, சிஸ்மா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர்,
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, சிஸ்மா சங்க பொதுச்செயலாளர் பாபுஜி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து பல கோரிக்கைகளை வலியுறுத்தி பின்னலாடை துறை சார்பாக மனு அளித்த போதும் எங்கள் பிரச்சினைகளுக்கு எளிய முறையில் தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பிறகு மாதாந்திர கொள்முதல், விற்பனை மற்றும் நிகரவரி செலுத்துவதற்கான படிவங்கள் 3 விதமாக இருந்து வருகிறது. இந்த 3 விதமான படிவங்களையும் நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப அனைத்து விதமான ஆவணங்களையும் தயார் செய்துகொண்டு, தாக்கல் செய்வதற்கு தாமதம் ஆகிறது.
இதனால் பல்வேறு இன்னல்களுக்கு பின்னலாடை துறையும் மற்றும் அனைத்து துறையினரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில், வாட் வரி விதிப்பை ஒரே படிவத்தில் தாக்கல் செய்யும் முறையை அமல்படுத்துவதோடு, ரிட்டன் தாக்கல் செய்யும் படிவமும் தமிழில் இருந்தால் சராசரி கல்வி கற்றவர் கூட அரசுடன் ஒன்றி போய் அனைத்து வர்த்தகத்தையும், ஜி.எஸ்.டி.யுடன் இணைத்து செயல்படுவதால் அரசுக்கு வரி விகிதாச்சாரம் அதிகமாவதை விட தொழில் முனைவோர்களும் புரிதலோடு செயல்பட வாய்ப்பாக இருக்கும்.
மேலும், ஜி.எஸ்.டி. நடை முறைக்கு பின்பு பல்வேறு சிரமங்களுக்கு தொழில்துறையினர் ஆளாகி வருவதை, மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். சிறு, குறு, நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் வங்கி கடன் பெறுவதில் சிக்கல் நிறைந்துள்ளதால், முத்ரா திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.66 ஆயிரத்து 536 கோடி கடன் பெற்று நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்திற்கு குறைவாக கடன் தேவைப்படும் நிறுவனங்கள் கடன் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்தும், திருப்பூர் பின்னலாடை நகரத்தில் சிறு, குறு நிறுவனங்கள் கடன் பெறுவதில் எளிய நடைமுறை இல்லை.
முத்ரா கடன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் முத்ரா யோஜனா திட்டத்தை பின்னலாடை துறையினருக்கு எளிமையான முறையில் கடன் பெற வங்கிகள் மூலம் கலந்துரையாடல் கூட்டத்தை, தொழில்துறை சார்ந்த சங்க பிரதிநிதிகளோடு நடத்த முன்வர வேண்டும். முத்ரா கடன் பெறுவதில் எந்த சொத்து பிணையம், தனிநபர் ஜாமின் தேவையில்லை என்பது கடநிலையில் தொழில் புரிவோர்க்கு தெரிவதில்லை. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் மிக குறைந்த நபர்களே பயன்பெற்றுள்ளனர். இது அனைத்து சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கும், தொழில் தொடங்குபவர் களுக்கும் பயன்பெறும் வகையில் சென்றடைய வேண்டும். மேலும், ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய தமிழில் படிவம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story