சேலத்தில், ரூ.5 கோடியில் 12 பசுமை வெளி பூங்காக்கள் முதல்-அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்


சேலத்தில், ரூ.5 கோடியில் 12 பசுமை வெளி பூங்காக்கள் முதல்-அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 31 Aug 2018 4:15 AM IST (Updated: 31 Aug 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமை வெளி பூங்காக்களை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சூரமங்கலம் மண்டலம் 19-வது வார்டில் தர்ம நகர், 23-வது வார்டில் முல்லை நகர், 24-வது வார்டில் கிழக்கு மேம்பால நகர், 25-வது வார்டில் அபிராமி கார்டன், அஸ்தம்பட்டி மண்டலம் 6-வது வார்டில் பிரகாசம் நகர், பரமன் நகர், குறிஞ்சி நகர், 8-வது வார்டில் கம்பர் தெரு, அம்மாபேட்டை மண்டலம் 40-வது வார்டில் அய்யாசாமி பார்க், 43-வது வார்டில் எல்லீஸ் கார்டன், கொண்டலாம்பட்டி மண்டலம் 50-வது வார்டில் அபிராமி கார்டன், காந்திநகர் ஆகிய 12 இடங்களில் பசுமை வெளி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் ரூ.5 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் 12 பசுமை வெளி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு அம்மாபேட்டை மண்டலம் அய்யாசாமி பசுமைவெளி பூங்காவை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

பூங்காக்களில் மூத்த குடிமக்கள் மற்றும் பொது மக்கள் நடைபயிற்சி செய்ய நடைபாதைகள், 8 வடிவிலான நடைபயிற்சி மேடைகள், தியான மண்டபம், மூலிகை பண்ணைகள், இறகுப்பந்து , கூடைப்பந்து விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தைகளை கவரும் வகையில் வண்ண ஓவியங்கள், குழந்தைகளுக்கான ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், வண்ண ஒளி விளக்குகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

சிறப்பு அம்சமாக பூங்காக்களில் உள்ள மரம், செடி, கொடிகளில் இருந்து கிடைக்கக் கூடிய இலை, தழை போன்ற மக்கும் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிப்பதற்காக தள கலவை உரக்கிடங்குகளும், பூங்காக்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சூரிய ஒளி சக்தியின் மூலம் மின்சாரம் பெறும், சூரிய மின்தகடுகள் அனைத்து பூங்காக்களிலும் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் 55 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்களை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு முதல்-அமைச்சர் வழங்குகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து காலை 9.45 மணிக்கு சேலம் போஸ் மைதானம் நேரு கலையரங்கில் ‘பிளாஸ்டிக் மாசில்லா சேலம் மாவட்டம்’ என்ற தலைப்பிலான விழிப்புணர்வு முகாமை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். சாலை பாதுகாப்பு ரோந்து குழுக்களில் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி மற் றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் காலை 10.40 மணிக்கு சேலம் அஸ்தம்பட்டி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் இயக்குனர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story