பெரம்பூரில் சேலையில் தீப்பிடித்து பெண் பலி குடிசையும் எரிந்து சாம்பல்


பெரம்பூரில் சேலையில் தீப்பிடித்து பெண் பலி குடிசையும் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 31 Aug 2018 3:44 AM IST (Updated: 31 Aug 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பூரில், சமையல் செய்ய மண்எண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்த போது சேலையில் தீப்பிடித்து பெண் பரிதாபமாக இறந்தார். இதில் குடிசை வீடும் தீயில் எரிந்து நாசமானது.

பெரம்பூர், 

சென்னை பெரம்பூர் சிவசக்தி தெருவைச் சேர்ந்தவர் கோகுல். கார் டிரைவர். இவருடைய மனைவி விஜயா(வயது 32). இவர்களுக்கு கிரோசி(11) என்ற ஒரு மகள் இருக்கிறாள். இவர்களுக்கு சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, அதன் மொட்டை மாடியில் குடிசை அமைத்து வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை மகள் கிரோசி வெளியே சென்று இருந்தார். வீட்டின் தரை தளத்தில் கோகுல் நின்று கொண்டிருந்தார். குடிசை வீட்டில் தனியாக இருந்த விஜயா, சமையல் செய்வதற் காக மண்எண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார்.

சேலையில் தீப்பிடித்தது

அப்போது எதிர்பாராதவிதமாக விஜயா அணிந்து இருந்த சேலையில் தீப்பிடித்துக்கொண்டதாக தெரிகிறது. உடல் முழுவதும் தீ பரவியதால் அவர், வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, கீழே நின்று கொண்டிருந்த கோகுல் மொட்டை மாடிக்கு ஓடிச்சென்றார்.

ஆனால் அதற்குள் விஜயா உடலில் எரிந்த தீ, குடிசைக்கு பரவியதால், குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அப்போது மனைவியை காப்பாற்ற முயன்ற கோகுலும் தீக்காயம் அடைந்தார்.

இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்து வந்த செம்பியம் தீயணைப்பு நிலைய வீரர்கள், குடிசையில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

உயிரிழந்தார்

பின்னர் படுகாயம் அடைந்த விஜயாவை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை விஜயா, பரிதாபமாக உயிரிழந்தார்.

தீக்காயம் அடைந்த கோகுல், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story