குடிநீர் வினியோகம் செய்ததால் மாநகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் மறியல்


குடிநீர் வினியோகம் செய்ததால் மாநகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 31 Aug 2018 4:13 AM IST (Updated: 31 Aug 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

கலங்கலாக குடிநீர் வினியோகம் செய்ததால், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணராவ் 1, 2, 3-வது தெருக்கள் மற்றும் கணபதி அக்ரஹாரம் பகுதி குடியிருப்புகளுக்கு புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. அதன் மூலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. இந்தநிலையில், நேற்று அந்த பகுதிகளுக்கு மிகக்குறைந்த அளவே தண்ணீர் வந்தது.

மேலும், குடிநீர் கலங்கலாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நேற்று மாலை மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து கமிஷனர் மனோகரை சந்தித்து பேசினர்.

அப்போது, தண்ணீர் கலங்கலாக வருவதால் குடிக்க முடியாத நிலை உள்ளது என்றும், எங்களுக்கு, பழைய குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு புதிய குழாய்கள் மூலமே குடிநீர் வினியோகிக்கப்படும் என்று கமிஷனர் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பொதுமக்களை அழைத்து கமிஷனர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நேரில் வந்து ஆய்வு செய்து சீராகவும், சுகாதாரமான முறையிலும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக, நேற்று காலை மேட்டுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அதுவரை பழைய குடிநீர் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதற்கிடையே, நேற்று மாலை திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் பதிக்கப்பட்டுள்ள புதிய குழாய்களில் தண்ணீரை திறந்துவிட்டு 2-வது முறையாக சோதனை செய்தனர். அப்போது, சில இடங்களில் குழாய்கள் சரியாக பொருத்தப்படாமல் இருந்ததால் அந்த வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. சாலையில் வீணாக சென்ற குடிநீரை பொதுமக்கள் வாளி, குடங்களில் பிடித்து சென்றனர். உடனே, தண்ணீர் நிறுத்தப்பட்டு குழாய்களை பொருத்தும் பணி நடந்தது.

Next Story