மராட்டியத்தில் 115 தாலுகாக்கள் பருத்தி விவசாய பகுதியாக அறிவிப்பு
மராட்டியத்தில் உள்ள 115 தாலுகாக்களை பருத்தி விவசாய பகுதியாக அரசு அறிவித்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் உள்ள 115 தாலுகாக்களை பருத்தி விவசாய பகுதியாக அரசு அறிவித்து உள்ளது.
பருத்தி விவசாயம்
மரத்வாடா, விதர்பா மண்டலங்கள் மற்றும் வடக்கு மராட்டியத்தை சேர்ந்த 115 தாலுகாக்களை பருத்தி விளையும் விவசாய பகுதியாக மராட்டிய அரசு அறிவித்து உள்ளது. அவுரங்காபாத், ஜல்னா, பர்பானி, ஹிங்கோலி, நாந்தெட், பீட், புல்தானா, அமராவதி, நாக்பூர், அகோலா, யவத்மால், வார்தா, சந்திராப்பூர், நாசிக், துலே, நந்தூர்பர், ஜல்காவ், அகமத் நகர் ஆகிய மாவட்டங்களில் இந்த தாலுகாக்ககள் உள்ளன.
பருத்தி உற்பத்தியையும், ஜவுளி துறையையும் ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். பருத்தி விவசாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள தாலுகாக்களில், எவ்வளவு பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது, அதில் உள்ளூர் ஜவுளி நிறுவனங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறது என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.
உள்ளூரில் விளையும் பருத்தியை 50 சதவீதத்திற்கு குறைவாக அங்குள்ள நிறுவனங்கள் பயன்படுத்துவது தெரியவந்தால், அரசு சார்பில் அப்பகுதியில் கூடுதலாக ஜவுளி ஆலை தொடங்கப்படும்.
விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்
இதன்மூலம் பருத்தி விவசாயிகளும், பருத்தி உற்பத்தி பொருட்களை வாங்குபவர்களும் பயன் அடைவார்கள். தங்கள் பகுதியில் உள்ள ஜவுளி ஆலையிலேயே, பருத்தி பெருமளவு கொள்முதல் செய்யப்படுவதால் போக்குவரத்து செலவும் குறையும்.
தற்போது பருத்தி பயிர்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அரசு ஜவுளி ஆலைகள் இல்லை. இதை பயன்படுத்தி இடைதரகர்கள் குறைந்த விலையில் பருத்தியை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர். இதனால் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர்.
இந்த திட்டம் மூலம் தங்கள் பகுதியிலேயே ஜவுளி ஆலை தொடங்கப்படுவதால் விவசாயிகள் அதிக லாபத்தை பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story