போலி நகையை அடகு வைத்து ரூ.18 லட்சம் மோசடி: நிதி நிறுவன மேலாளர் அதிரடி கைது


போலி நகையை அடகு வைத்து ரூ.18 லட்சம் மோசடி: நிதி நிறுவன மேலாளர் அதிரடி கைது
x
தினத்தந்தி 31 Aug 2018 4:30 AM IST (Updated: 31 Aug 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போலி நகையை அடகு வைத்து ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன மேலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லையில் போலி நகையை அடகு வைத்து ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன மேலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

போலி நகை அடகு மோசடி

நெல்லை டவுன் குற்றாலம் ரோட்டில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு டவுனை சேர்ந்த வியாபாரி முகமது அசாருதீன் மற்றும் இவருடைய நண்பர்கள் 5 பேர் சேர்ந்து நகைகளை அடகு வைத்து மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு மேல் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் அடகு வைத்த நகைகளை நிதி நிறுவன நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது அவை போலி நகை என்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் நிதி நிறுவன ஊழியர்கள், முகமது அசாருதீனை தொடர்பு கொண்டு உடனடியாக வங்கிக்கு வந்து பணத்தை செலுத்தி, போலி நகையை பெற்றுச் செல்லுமாறு கூறி உள்ளனர்.

பணத்துடன் மொபட் திருட்டு போனதாக நாடகம்

இதையடுத்து முகமது அசாருதீன் தனது கூட்டாளிகளான டவுனை சேர்ந்த செல்வம், பேட்டையை சேர்ந்த செய்யது அபுபக்கர் ஆகியோருடன் நேற்று முன்தினம் காலையில் நிதி நிறுவனத்துக்கு வந்தார். அப்போது நகையை திருப்புவதற்காக மொபட்டில் ரூ.11 லட்சம் வைத்திருந்ததாகவும், நிதி நிறுவனம் முன்பு நிறுத்தி இருந்த அந்த மொபட் திருட்டு போய் விட்டதாகவும் நாடகம் ஆடினர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் குட்டு அம்பலமானது. போலி நகையை வைத்து மொத்தம் ரூ.18 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அதாவது போலி நகையை அடகு வைத்து பெற்ற பணத்தை திருப்பி நிதி நிறுவனத்துக்கு செலுத்தாமல் இருக்க இந்த நாடகம் ஆடியது தெரியவந்தது.

இதுகுறித்து நிதி நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அசாருதீன், செல்வம், செய்யது அபுபக்கர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலாளர் அதிரடி கைது

இந்த சம்பவத்தில் முகமது அசாருதீன் கூட்டாளிகள் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுதவிர போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த விவகாரத்தில் நிதி நிறுவன மேலாளர் கோயில்மணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலி நகைக்கு பணம் கொடுத்ததில் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக் கப்பட்டார். இந்த மோசடிக்கு நிதி நிறுவன ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story