மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக் கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை


மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக் கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை
x
தினத்தந்தி 31 Aug 2018 4:43 AM IST (Updated: 31 Aug 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட கூலி தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் நடு ஓடுதுறையைச் சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 35), கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சிவா (19). மீன்பிடி துறைமுகத்தில் சுமை தூக்கும் தொழிலாளி.

சிவா நேற்று மதியம் அதேபகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனை அற்புதராஜ் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதில் சிவா ஆத்திரம் அடைந்து அற்புதராஜை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த அற்புதராஜ் மயங்கி விழுந்தார். அதைப்பார்த்ததும் சிவா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து அற்புதராஜை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அற்புதராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த கொலை குறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story