வாணாபுரம் பகுதியில் தண்ணீர் இல்லாததால் காய்ந்து வரும் கரும்பு பயிர்கள்: விவசாயிகள் கவலை


வாணாபுரம் பகுதியில் தண்ணீர் இல்லாததால் காய்ந்து வரும் கரும்பு பயிர்கள்: விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 31 Aug 2018 5:15 AM IST (Updated: 31 Aug 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் பகுதியில் தண்ணீர் இல்லாததால் கரும்பு பயிர் காய்ந்து வருகின்றது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.

வாணாபுரம், 

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான வாழவச்சனூர், மழுவும்பட்டு, தென்கரும்பனூர், தச்சம்பட்டு, தென்முடியனூர், சதா குப்பம், அகரம் பள்ளிப்பட்டு, பெருந்துறைபட்டு, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதியில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதில் விவசாயிகள் கம்பு, மணிலா, கேழ்வரகு மற்றும் நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிடப்பட்டு அதனை பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகள் ஒரு ஆண்டு பயிரான கரும்பை ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏரி, குளம், கிணறுகளில் தண்ணீர் இருந்ததால் நிலத்தடி நீர் மட்டம் ஓரளவு இருந்தது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் கரும்பு பயிரை பயிரிட்டு பராமரித்து வந்தனர்.

தற்போது ஏரி, குளம் மற்றும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் கரும்பு பயிருக்கு போதுமான தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் கரும்பு பயிர்கள் காய்ந்து வருகின்றது. இதனை மாடுகள் மேய்ந்து வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஏரி, குளம், கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் தற்போது 8 மாத பயிரான கரும்பு தண்ணீரின்றி காய்ந்து வருகின்றது. அவற்றை கால்நடைகள் மேய்கின்றன.இதனால் நாங்கள் கவலை அடைந்து உள்ளோம்’ என்றனர்.

Next Story