தினம் ஒரு தகவல் : ரெடிமேடு வீடுகள்


தினம் ஒரு தகவல் : ரெடிமேடு வீடுகள்
x
தினத்தந்தி 31 Aug 2018 11:26 AM IST (Updated: 31 Aug 2018 11:26 AM IST)
t-max-icont-min-icon

ஒரு வீடு கட்ட எவ்வளவு காலம் பிடிக்கும்? 4 மாதத்தில் இருந்து 6 மாதம் வரை ஆகலாம். அதற்கு மேலும் கூட காலம் பிடிக்கும்.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் ஒரு நாளில் 4 வீடு கட்டலாம் என்கிறார், கெவின் மூர். நியூசிலாந்தை சேர்ந்த கட்டிடப் பொறியாளரான இவர், இந்த ரெடிமேடு வீட்டு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். கட்டுமான துறையில் ஆகும் செலவுகளை கட்டுப்படுத்த ஒரு புதிய தொழில்நுட்பம் கொண்டு வர வேண்டும் என மூர் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

தனது பல ஆண்டு முயற்சிக்குப் பிறகு 1985-ம் ஆண்டு அவர் இன்சுலேட் ப்ரீகேஸ்ட் காங்கிரீட் எனப்படும் பேனல்களை உருவாக்கினார். இந்தப் பேனல்களின் மூலம் அவர் வீட்டையே ரெடிமேடாக உருவாக்க முடியும் என்பதை கண்டறிந்தார். இந்தத் தொழில்நுட்பத்திற்காக அவர் 1989-ம் ஆண்டு உரிமமும் பெற்றுள்ளார். இதன் மூலம் முழு வீட்டையும் தொழிற்சாலையிலேயே உருவாக்கிவிட முடியும். வீடு கட்டப்படும் இடத்தில் கொண்டு வந்து இறக்கினால் போதும்.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த தொழில்நுட்பம் இப்போது இந்தியாவிலும் பரவலாகி வருகிறது. ஆனால் இந்த தொழில்நுட்பமானது தங்கும் விடுதிகள், சிறிய அறைகள் தொகுப்பு வீடுகளுக்கே பொருத்தமானதாக இருக்கும். பெங்களூரு வளர்ச்சி நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 12 ஏக்கர் நிலத்தில் 1,520 தொகுப்பு வீடுகளைக் கட்டியுள்ளது.

இந்த தொழில்நுட்பம் மூலம் வீடு கட்டுவது சுவாரசியமானதாக இருக்கிறது. வீட்டுக்கான தரை, ஜன்னல்கள், சமையல் அறை எல்லாமும் தொழிற்கூடத்திலேயே தயாரிக்கப்பட்டு விடுகின்றன. முழு வீட்டையும் கட்டுமானத் தளத்தில் இறக்கி வைத்தால் போதும்.

அறைகள் மட்டுமல்ல, எலக்ட்ரிக்கல் ஒயரிங், சுவிட்ச், பிளம்பிங் வேலைகளையும் தொழிற்கூடத்திலேயே முடித்து விடுகிறார்கள். மாடிப்படிகளையும் தேவையான அளவுக்கேற்ப முன்பே தெரிவித்தால் அதையும் தொழிற்கூடத்திலேயே தயாரித்து, கொண்டுவந்து விடுகிறார்கள்.

இந்த முறையில் பாரம்பரிய முறையில் உபயோகப்படுத்தப்படும் சுவர்களுக்குப் பதிலாக கன சதுரங்களை யூனிட்டுகளாக பிரித்துப் பயன்படுத்துகிறார்கள். ரெடிமேடு வீடு என்பதால் அது பாரம்பரிய கட்டிடத்தை விட உறுதி குறைந்தது என நினைக்க வேண்டாம்.

இம்முறையில் உருவாக்கப்படும் தூண்கள் காங் கிரீட், கம்பிச் சட்டங்கள் கொண்டு உருவாக்கப்படுகிறது. அதனால் இது பாரம்பரிய முறையைவிடவும் உறுதியானதாகவும் நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். மேலும் இந்த தூண்கள் அதிக எடையை தாங்கக் கூடியது. பூகம்பம் அதிர்வுகளைத் தாங்கக்கூடிய வகையிலும் இதன் அமைப்பு இருக்கும்.

இந்த வகை வீடுகள் சமூகத்தின் மிகப் பின் தங்கியுள்ளவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் மூர், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வசதியான வீடுகளும் கட்ட முடியும் என் கிறார். 

Next Story