காரைக்குடியில் வாடகை செலுத்தாத 19 கடைகளுக்கு சீல் வைப்பு
காரைக்குடி நகராட்சிக்கு சொந்தமான வாடகை செலுத்தாத 19 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
காரைக்குடி,
காரைக்குடி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் நிலையம், கல்லூரி சாலை மற்றும் நகர் பகுதிகளில் பல்வேறு கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த 2016–ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் 225 கடைகளுக்கு வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், முடியரசன் சாலை, அண்ணா மார்க்கெட், புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள 19 கடைகளில் ரூ.40 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை. இதைதொடர்ந்து அந்த கடைகளுக்கு நகராட்சி சார்பில் வாடகை பாக்கியை செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் கடை உரிமையாளர்கள் வாடகை பணத்தை செலுத்த முன்வரவில்லை.
இதையடுத்து அந்த கடைகள் முழுவதும் பூட்டி சீல் வைக்கப்படும் என்று நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுத்த பின்னரும் அவர்கள் வாடகை பாக்கி செலுத்தவில்லை. இதனால் நேற்று காரைக்குடி நகராட்சி நகர் நல அலுவலர் பெரியசாமி, மேலாளர் ஷியாமளா, வருவாய் ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், மாரிமுத்து ஆகியோர் அந்த கடைகளுக்கு சென்று பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் வாடகை பாக்கி கட்டாத காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக தகவல் மைய கட்டிடத்தையும் நகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.