மேலூர் அருகே வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை: ரூ.3¼ கோடி மதிப்புள்ள நகைகள் தப்பின


மேலூர் அருகே வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை: ரூ.3¼ கோடி மதிப்புள்ள நகைகள் தப்பின
x
தினத்தந்தி 1 Sept 2018 5:00 AM IST (Updated: 31 Aug 2018 6:59 PM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை முயற்சியில் கொள்ளையர்கள் பெட்டகத்தை திறக்க முடியாததால் ரூ. 3 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் தப்பியது.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது தெற்குதெரு கிராமம். இந்த கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் மதுரை – சென்னை நான்கு வழிச்சாலை ஓரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கயில் தெற்குதெரு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கநகைகளை அடமானம் வைத்து ரூ.3 கோடிக்குமேல் கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவில் இங்கு வந்த கொள்ளையர்கள் வங்கியின் பின்புறமாக சென்று அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவை கழற்றி உடைத்துள்ளனர். பின்னர் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அலாரம் செயல்பாட்டை துண்டித்த கொள்ளையர்கள் தயாராக கொண்டு வந்து இருந்த கியாஸ் கட்டர் வெல்டிங் எந்திரத்தை பயன்படுத்தி தங்கநகைகள், பணம் இருந்த இரும்பு பெட்டக அறையை திறந்துள்ளனர்.

 பின்னர் அங்கிருந்த பெட்டகத்தை திறக்க விடியவிடிய கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில் இரவுபொழுது விடிய ஆரம்பித்து மக்கள் நடமாட்டத்தை கண்ட அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். அவசர கதியில் கொண்டுவந்த சில பொருட்களை கொள்ளையர்கள் அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர் ஜேசு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் வங்கி அருகே சரக்கு வாகனம் நின்று சென்றிருந்த தடம் பதிந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இரவுநேர பணியில் பாதுகாவலர் ஆறுமுகம் இல்லாமல் இருந்துள்ளது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்கள் வங்கியின் முன் பக்கத்தில் இருந்த ரகசிய கேமராவை கவனிக்கவில்லை. இதனால் அந்த கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

 கொள்ளை முயற்சி தகவல் பரவி வங்கியில் தங்க நகைகளை அடமானம் வைத்த கிராம மக்கள் அச்சமடைந்து வங்கி முன்பு திரண்டனர். பின்னர் வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு போலீசார் பெட்டகத்தை திறந்து சோதனை நடத்தினர்.

அப்போது அதில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும், 2 லட்சத்து 79 ஆயிரத்து 815 ரூபாய் 58 காசு பணமும் பாதுகாப்பாக இருப்பது தெரிந்தது. இதையடுத்து வங்கி அதிகாரிகளும், பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பொற்கை வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வங்கி அமைந்துள்ள நான்கு வழிச்சாலையில் எப்போதும் வாகனங்கள் சென்றுவர பரபரப்பாக காணப்படும் வேளையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

இதே வங்கியில் கடந்த 1993–ம் ஆண்டில் கொள்ளை முயற்சி நடந்தது.அப்போது கொள்ளையர்கள் இரவு காவலர் கருப்பையாவை கொலை செய்துவிட்டு தப்பினர். கச்சிராயன்பட்டி வங்கியிலும் இதேபோன்ற கொள்ளை முயற்சி நடந்து அவர்கள் விட்டுச்சென்ற செல்போன் மூலம் கொள்ளையர்கள் கைதாகி தற்போது சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ஊருக்கு வெளிபகுதியில் அமைந்துள்ளதால் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இதுபோன்ற கொள்ளை முயற்சி சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story