வெளிநாடுகளுக்கு பாறாங்கற்களை தூத்துக்குடி புதிய துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
வெளிநாடுகளுக்கு பாறாங்கற்களை தூத்துக்குடி புதிய துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் பிரைட்டர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தூத்துக்குடியில் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய துறைமுகம், பழைய துறைமுகம் என 2 பகுதிகளாக இயங்கி வருகின்றன. தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாறாங்கற்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2000–ம் ஆண்டு வரை புதிய துறைமுகம் வழியாகத்தான் பாறாங்கற்கள் கொண்டு செல்லப்பட்டது. அப்போது கற்களின் எடையை பொறுத்து உரிய கட்டணத்தை அமெரிக்க டாலர் மதிப்பில் பெற்றனர்.
அதன்பிறகு பழைய துறைமுகம் வழியாக பாறாங்கற்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வருடத்திற்கு தோராயமாக 15 லட்சம் டன் பாறாங்கற்கள் பழைய துறைமுகத்தின் வழியாக ஏற்றுமதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இப்போது ஏற்றுமதி செய்யப்படும் கற்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.3 கோடியே 39 லட்சத்து 69 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பழைய துறைமுகம் வழியாக பாறாங்கற்களை கொண்டு செல்லும்போது, மன்னார்வளைகுடா, பவளப்பாறை பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே ஏற்றுமதிக்காக கொண்டு செல்லப்படும் பாறாங்கற்களை விதிகளின்படி புதிய துறைமுகம் வழியாக கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும். அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை செயலாளர், தூத்துக்குடி துறைமுகக்கழக தலைவர், ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.