ரோடியர் மில் தொழிலாளர்கள் சாலைமறியல்


ரோடியர் மில் தொழிலாளர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 1 Sept 2018 4:30 AM IST (Updated: 31 Aug 2018 8:16 PM IST)
t-max-icont-min-icon

ரோடியர் மில் தொழிலாளர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவை –கடலூர் சாலையில் ரோடியர் மில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த மில் கடந்த பல ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. மில் தொழிலாளர்களுக்கு தற்போது லே–ஆப் (பாதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை) வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் விருப்ப ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கவேண்டும், தொழிலாளர்களுக்கான நிலுவை தொகைகளை வழங்கவேண்டும், மில்லை திறந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர் (ஏ.ஐ.டி.யு.சி.) வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி அவர்கள் நேற்று மில் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். போராட்டத்தில் செயலாளர் அபிசேகம், பொருளாளர் தேசிகன், துணைத்தலைவர்கள் பூபதி, முத்தையா, கலியாணசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த முதலியார்பேட்டை போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story