அவசரகதியில் தயார் செய்யப்பட்ட ஆதார் அட்டைகள்: பிழைகளை சரி செய்ய மாணவர்கள் சிரமப்படும் நிலை


அவசரகதியில் தயார் செய்யப்பட்ட ஆதார் அட்டைகள்: பிழைகளை சரி செய்ய மாணவர்கள் சிரமப்படும் நிலை
x
தினத்தந்தி 31 Aug 2018 11:00 PM GMT (Updated: 31 Aug 2018 6:37 PM GMT)

அவசர கதியில் தயார் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்ட ஆதார் அட்டைகளில் உள்ள பிழைகளை சரி செய்ய மாணவ, மாணவிகள் பெரும் சிரமப்படும் நிலை உள்ளது.

சிவகாசி,

மத்திய அரசு சார்பில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதார்அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் பெயர், விலாசம், தந்தை பெயர், வங்கி கணக்கு எண், கருவிழி, விரல்ரேகை உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு 12 இலக்க எண்களை ஆதார் எண்களாக வழங்கப்பட்டு வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த அட்டையை எடுக்க பெரும் சிரமப்பட வேண்டி உள்ளது.

அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள இ.சேவை மையங்களில் மட்டும் இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தாலுகா அளவில் 5–க்கும் குறைவான இடங்களில் தான் ஆதார் அட்டை எடுக்கப்பட்டு அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் ஆதார் அட்டை பெற பெரும் அளவில் கூட்டம் காத்திருந்து எடுக்க வேண்டிய நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.

ஆதார் மையங்களில் பெரும் அளவில் மக்கள் கூட்டம் புதிய ஆதார் அட்டைகள் பெற வருகிறது. ஆனால் அந்த மையங்களில் 3–க்கும் குறைவான நபர்களே பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 2 பேர் மட்டுமே ஆதார் அட்டைக்கு விவரம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அவசரகதியில் இந்த பணியை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பொதுமக்களிடம் விவரங்களை கேட்டு வாங்கும் ஆதார் மைய ஊழியர்கள் அதை சரியான முறையில் பதிவு செய்யாததால் பல இடங்களில் ஆதார் அட்டை பெயர், விலாசம் போன்றவைகளில் தவறு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய மீண்டும் ஒரு முறை ஆதார் மையத்துக்கு வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கால விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் 2018–19 கல்வி ஆண்டில் 10–ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆதார் அட்டை நகல் கேட்கப்படுகிறது. இவ்வாறு கேட்கப்படும் ஆதார் அட்டையில் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியானதாக இல்லை என்றால் அவற்றை மாற்றி வர பள்ளி நிர்வாகம் மாணவர்களை நிர்ப்பந்திக்கிறது. ஒரு பள்ளியில் படிக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ஏதாவது ஒரு பிழையுடன் இ.சேவை மையத்தில் பிழைகளை சரி செய்ய காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகாசியில் உள்ள ஒரு பள்ளியில் 10–வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது பெயரில் உள்ள திருத்தத்தை சரி செய்ய நேற்று காலை சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் உள்ள இ.சேவை மையத்தில் 2 மணி நேரம் காத்திருந்தார். அவரை போலவே அவரது பள்ளியில் படிக்கும் 10–க்கும் மேற்பட்ட மாணவிகளும் தங்களது ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை சரி செய்ய நீண்ட நேரம் அந்த ஆதார் மையத்தில் காத்திருந்தனர்.

இது போன்று மாணவர்களை சிரமப்படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு சிறப்பு முகாம் வைத்து ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை சரி செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story