நெல்லை அருகே, பாலத்தில் ஜீப் மோதி விபத்து: மணமகளின் தந்தை உள்பட 3 பேர் பலி


நெல்லை அருகே, பாலத்தில் ஜீப் மோதி விபத்து: மணமகளின் தந்தை உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 31 Aug 2018 10:00 PM GMT (Updated: 31 Aug 2018 7:12 PM GMT)

நெல்லை அருகே பாலத்தில் ஜீப் மோதிய விபத்தில் மணமகளின் தந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். மறுவீட்டிற்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.

மானூர், 

நெல்லை அருகே பாலத்தில் ஜீப் மோதிய விபத்தில் மணமகளின் தந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். மறுவீட்டிற்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.

திருமணம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் 4-ம் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவருடைய மகள் மகேஸ்வரி. இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பராக்கிரமபாண்டி பகுதியைச் சேர்ந்த புரோஸ்காந்த் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் மணமகளின் வீட்டில் நடைபெற்றது.

பின்னர் பெண் வீட்டார் மாலையில் மறுவீட்டுக்கு செல்வதற்காக ஒரு ஜீப்பில் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றனர். அங்கு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு ஜீப்பில் முருகன், அவருடைய மருமகன் முத்துக்குமார், செந்தில்முருகன், லட்சுமி (55), ஆறுமுகம் (50), இளவரசி (4) மற்றும் டிரைவர் மாடசாமி (22) ஆகிய 7 பேர் சங்கரன்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

பாலத்தில் மோதியது

நள்ளிரவு 1.30 மணியளவில் ஜீப் நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள சுப்புலாபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் இருந்த பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜீப் பலத்த சேதமடைந்தது. ஜீப்பின் இடிபாடுகளில் சிக்கிய 7 பேரும் அபயக்குரல் எழுப்பினர்.

அவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கிய 7 பேரையும் ஒவ்வொருவராக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

3 பேர் சாவு

அங்கு 7 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன், முத்துக்குமார், மாடசாமி ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலத்தில் ஜீப் மோதிய விபத்தில் மணமகளின் தந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Next Story