விழுப்புரம் அரசு கல்லூரியில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை நடப்பதாக கூறி பெற்றோர்கள் திடீர் போராட்டம்
விழுப்புரம் அரசு கல்லூரியில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை நடப்பதாக கூறி பெற்றோர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை 3 கட்ட கலந்தாய்வு மூலம் நடத்தப்பட்டது. அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கிய பிறகும் கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவ– மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் சிலர், அரசியல் கட்சியினர் மூலமாகவும், முக்கிய நபர்கள் சிலரின் சிபாரிசு அடிப்படையிலும் கல்லூரியில் சேர்த்து வருவதாகவும், இதற்காக கடந்த சில நாட்களாக மாலை வேளையில் கல்லூரி முடிந்த பிறகு அரசு விதிகளை மீறி மாணவர் சேர்க்கை நடப்பதாகவும் புகார் எழுந்தது.
நேற்று மாலை கல்லூரி முடிந்த பின்னர் மாணவர் சேர்க்கைக்காக அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள் கல்லூரி வளாகத்தில் குவிந்தனர். இரவு 8.30 மணி வரை இந்த மாணவர் சேர்க்கை நடந்தது. இதையறிந்த கல்லூரியில் சேர்க்கை கிடைக்காத மாணவ– மாணவிகளின் பெற்றோர்கள் திடீரென கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர் சேர்க்கை பணியை விட்டுவிட்டு கமிட்டி உறுப்பினர்கள் கல்லூரியில் இருந்து சென்றனர். இதனை தொடர்ந்து பெற்றோர்களும், அரசியல் பிரமுகர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுபோன்று கடந்த சில நாட்களாக விதியை மீறி மாணவர் சேர்க்கை நடப்பதாகவும், இதுகுறித்து சென்னை கல்லூரி கல்வி இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த திடீர் போராட்டத்தினால் அரசு கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.