தமிழகஅரசு தென்பெண்ணையாறு–பாலாற்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் பேட்டி
தென்பெண்ணையாற்றையும், பாலாற்றையும் இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என கடலூரில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகரில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் அமைக்கப்படும் என முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது ஏற்கனவே ஜெயலலிதா இருந்தபோது ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிதான். அப்போது இந்த திட்டத்தை அவர்கள் செயல்படுத்தவில்லை. இப்போதாவது ஒழுங்காக திட்டப்பணியை செய்வார்களா என தெரியவில்லை. ஆயிரம் கோடியையும் முழுமையாக செலவு செய்ய வேண்டும்.
தென்பெண்ணையாற்றையும், பாலாற்றையும் இணைக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருந்தது. முதலில் இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். காவிரி ஆற்றில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும். இதை செய்தால் ஒரு சொட்டு தண்ணீர் கடலுக்குள் செல்லாது.
வீராணம் ஏரியை தூர்வாரும் பணியில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உண்டு. எனவே விவசாயிகள் சார்ந்த கண்காணிப்பு குழு அமைத்து. அந்த குழுவின் மேற்பார்வையில் தூர்வாரும் பணிகள் நடைபெற வேண்டும்.
தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு முடிவு செய்வோம். முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு தமிழக அரசு கடலூரில் மணிமண்டபம் அமைக்க இருப்பது வரவேற்க கூடிய விஷயம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.