வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதிகள் அதிகாரி தகவல்


வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதிகள் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 31 Aug 2018 10:15 PM GMT (Updated: 31 Aug 2018 7:31 PM GMT)

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற உள்ள தகுதிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக, மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.400-ம் மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொருத்தமட்டில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்துள்ள பதிவுதாரர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முறையே ரூ.600, ரூ.750, ரூ.1000-ம் வீதம் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது. (கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தின் மூலம் உதவித்தொகை பெற்றிருந்தால் பதிவுதாரர்கள் இந்த அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்்தொகை பெறக்கூடாது).

இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பொதுப்பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர்களை பொறுத்தவரை 30.06.2018-க்குள் கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பகத்தில்் பதிவு செய்து ஐந்தாண்டு காலமும், 30.06.2018-ம் தேதி நிலவரப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்த மட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித்தொகையும் பெறுபவராக இருக்க கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளாக இருக்க கூடாது. இந்த நிபந்தனை தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. தகுதியுடையவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெறும் பயனாளிகளில், ஓராண்டு முடிவுற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்களுக்கு மீதமுள்ள காலாண்டிற்கான உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது, இதனை தவிர்க்கும் பொருட்டு வேலைவாய்ப்பகத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணம், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான ஒப்புகைச்சீட்டு, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி புத்தகத்தில் மைக்ரோ கோடு, பிரான்ஞ் கோடு முத்திரையிடப்பட்ட நகலை சமர்ப்பித்து இத்திட்டத்தின் கீழ் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story