சென்னையில் 4-ந் தேதி நடக்கிறது ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் கருணாநிதிக்கு புகழ் இரங்கல்


சென்னையில் 4-ந் தேதி நடக்கிறது ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் கருணாநிதிக்கு புகழ் இரங்கல்
x
தினத்தந்தி 1 Sept 2018 4:15 AM IST (Updated: 1 Sept 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் கருணாநிதிக்கு புகழ் இரங்கல் நிகழ்ச்சி சென்னையில் 4-ந் தேதி நடக்கிறது.

சென்னை,

ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் வகையில், புகழ் இரங்கல் போற்றுகை என்ற நிகழ்ச்சி, 4-ந் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கத்தில் நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு வழிபாடும் வாழ்த்தும் என்ற பெயரில் சு.வெங்கடேசன் திருவாசகம், தேவாரம், திவ்யப்பிரபந்தம், திருவருட்பா பாடல்களை பாடுகிறார்.

காலை 10 மணிக்கு நினைவுச்சுடர் ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கண் பார்வையற்ற பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு நினைவுச்சுடர் ஏற்றி வைக்கிறார்கள். காலை 10.15 மணிக்கு 1,008 வைணவ பாகவத அடியார் குழுக்களால் ராமானுஜர் நூற்றந்தாதி தமிழ்மறை அரங்கிசை முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது.

கவிதாஞ்சலி

11 மணிக்கு சூரியனில் தேனெடுத்து தித்திக்கும் தமிழ்தந்த முத்தமிழறிஞரின் மூவாத்தமிழுக்கு அருளஞ்சலி என்ற தலைப்பில் அவ்வை நடராஜன், ஊரன் அடிகளார், ராஜகோபாலன், சாரங்கபாணி, சாரதா நம்பி ஆரூரன், மாதவன் சாமிகள், நாகை முகுந்தன், மோகன சுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர்.

பகல் 1 மணிக்கு தாயின் கருவறையில் திராவிடத்தின் திசைகளை தேடிய கருணாநிதியின் வெள்ளித்திரையில் என்ற தலைப்பில் லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர் பாடல்களை பாடுகின்றனர். அதனை தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்கள் கதிரவன் மைந்தன் திருநாடு அலங்கரித்தல் நாடகாஞ்சலி நடத்துகின்றனர். மாலை 5 மணிக்கு கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் கருணாநிதிக்கு கவிதாஞ்சலி நடத்தப்படுகிறது.

ஜெகத்ரட்சகன் ஏற்பாடு

மாலை 6 மணிக்கு கருணாநிதிக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கருணாநிதியின் படத்தை திறந்து வைத்து பேசுகிறார். அதனை தொடர்ந்து சுகிசிவம், இலங்கை ஜெயராஜ், ஞானசுந்தரம், சுதா சேஷையன், அப்துல் காதர், மோகன், வக்கீல் ராமலிங்கம், பிரியா ராமச்சந்திரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். நிகழ்ச்சிகளை கங்கை மணிமாறன் தொகுத்து வழங்குகிறார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவன செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் செய்து வருகிறார்.

Next Story