குருவிகுளம் அருகே புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை பெற்றோர் வீட்டுக்கு விருந்துக்கு வந்த இடத்தில் சோக முடிவு
குருவிகுளம் அருகே புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் வீட்டுக்கு விருந்துக்கு வந்த இடத்தில் நடந்த இந்த விபரீத சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவேங்கடம்,
குருவிகுளம் அருகே புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் வீட்டுக்கு விருந்துக்கு வந்த இடத்தில் நடந்த இந்த விபரீத சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுப்பெண்
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் அடுத்துள்ள மலையான்குளத்தை சேர்ந்தவர் அய்யனு. இவருடைய மகள் மகாலட்சுமி(வயது19). இவர், கோவில்பட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி.கணினி அறிவியல் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள தல்குவார்பட்டி வேலுச்சாமி மகன் முத்து முனியாண்டி(23) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். முத்து முனியாண்டி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். திருமணத்துக்காக அவர் விடுப்பில் ஊருக்கு வந்தார். பின்னர் இவர்களுக்கு கடந்த 25-ந் தேதி திருமணம் கோலாகலமாக நடந்தது.
தீக்குளித்து சாவு
திருமணம் முடிந்து 3 நாட்கள் கணவர் வீட்டில் மகாலட்சுமி வசித்து வந்தார். 4-வது நாள் கணவருடன் மகாலட்சுமி விருந்துக்காக மலையான்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் சற்று மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு சென்றனர்.
மகாலட்சுமி மீது எரிந்த தீயை அணைத்தனர். பலத்த தீக்காயங்களுடன் இருந்த அவரை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அன்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
உதவி கலெக்டர் விசாரணை
அவருடைய உடலை பார்த்து பெற்றோர், கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. அவர் மரண வாக்குமூலத்தில்,‘ வயிற்று வலி அதிகம் இருந்ததாகவும், வலி தாங்க முடியாமல் தீக்குளித்ததாகவும் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே திருமணமாகி சில நாட்களே ஆவதால், மகாலட்சுமி சாவு குறித்து நெல்லை உதவி கலெக்டர் மைதிலி விசாரணை நடத்தி வருகிறார்.
புதுப்பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story