11,610 பெண் குழந்தைகளுக்கு ரூ.24¾ கோடிக்கு வைப்புத்தொகை பத்திரம், கலெக்டர் தகவல்
தமிழக அரசு முதல் அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
திருப்பூர்,
முதல்–அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்து ஆண் குழந்தை ஏதும் இல்லாது இருந்தால் அந்த பெண் குழந்தையின் பெயரில் ஆரம்ப வைப்பீடாக ரூ.50 ஆயிரமும், குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரம் அரசு சார்பில் முதலீடு செய்யப்படுகிறது.
இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு 5 ஆண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு, அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்ததும் ரூ.3 லட்சத்து 232–ம் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 117–ம் பயனாளிக்கு வழங்கப்படுகிறது. மேலும் தொகை வைப்பீடு செய்யப்பட்ட 6–வது ஆண்டில் இருந்து கல்வி செலவுக்காக ஆண்டுதோறும் ஊக்கத்தொகையாக ரூ.1,800 வரை வழங்கப்படுகிறது.
இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2011–ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை 11 ஆயிரத்து 610 பெண் குழந்தைகளுக்கு ரூ.24 கோடியே 76 லட்சத்து 58 ஆயிரத்து 200 மதிப்பில் வைப்புத்தொகைக்கான பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.