அமராவதி உபரிநீரை உப்பாறு அணைக்கு கொண்டுவர வேண்டும்: கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை


அமராவதி உபரிநீரை உப்பாறு அணைக்கு கொண்டுவர வேண்டும்: கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Sept 2018 4:45 AM IST (Updated: 1 Sept 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

அமராவதி அணையின் உபரிநீரை உப்பாறு அணை மற்றும் வட்டமலைக்கரை ஓடை அணைகளுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து:– அமராவதி அணை தற்போது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு கடலில் வீணாக கலந்தது.

இப்படி வீணாக செல்லும் தண்ணீரை சேமித்தால் தாராபுரம், வெள்ளகோவில் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அதற்காக அமராவதி பிரதான வாய்க்காலில் இருந்து நாட்டுக்கல்பாளையம் வழியாக 8 கி.மீ. தூரத்துக்கு வாய்க்காலை வெட்டினால் அமராவதி உபரிநீரை உப்பாறு அணை மற்றும் வட்டமலை கரை ஓடை அணைக்கு கொண்டு செல்லலாம். இதனால் 30 ஆயிரம் ஏக்கர் பயனடையும். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. எனவே அமராவதி உபரிநீரை உப்பாறு அணை மற்றும் வட்டமலை கரை ஓடை அணைககு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்

குண்டடம் கிளை வாய்க்கால் விவசாயிகள் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் தாராபுரம் (தாலுகா) விவசாயிகள்:– குண்டடம் பாசன கால்வாய் மூலம் 28 ஆயிரத்து 420 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்றுள்ளன. இந்த பரப்புக்கு 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்திற்கு 7 ஆயிரத்து 100 ஏக்கர் என்ற விகிதத்தில் பாசனம் செய்யப்படுகிறது. தற்போது ஒரு சுற்றுக்கு 5 நாட்கள் மட்டுமே எங்கள் பாசன பரப்பிற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. எனவே ஒரு சுற்றுக்கு 7 நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன்:–

பல்லடம் வட்டம் பனிக்கம்பட்டி தங்கசமுத்திரத்தில் நீர்வழிப்பாதை மற்றும் பொதுப்பாதை ஆக்கிரமித்து சிலர் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த பகுதியில் ஒரு தடுப்பணை அமைத்து தர வேண்டும்.

அமராவதி நதிநீர் பாசன பாதுகாப்பு இயக்க தலைவர் லிங்கம் சின்னசாமி:– அமராவதி ராஜவாயக்கால் இருபுறங்களிலும் மண்மேடாக உள்ளது. இதனை அகற்ற வேண்டும். மேலும், பழைய பாலங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு விதைப்பண்ணைகளில் தரமான விதைகளை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஊத்துக்குளி வட்டக்குழு விவசாயிகள்:– காவிரி மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் ஊத்துக்குளி போன்ற வறட்சி பகுதிகளுக்கு உபரிநீரை கொண்டு வர வேண்டும்.

மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள்: வேலாயுதம்பாளையம் அருகே நொய்யலின் குறுக்கே உள்ள தடுப்பணை உடைந்து சிதிலமடைந்துள்ளது. இந்த தடுப்பணையை சீரமைத்து கொடுத்தால் வேட்டுவபாளையம் குளத்திற்கு தண்ணீர் வந்து நிறையும். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் விவசாயிகளிடம் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, வேளாண்மைத்துறை துணை இயக்குனர் தமிழ்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாபு, துணை கலெக்டர்கள் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திரமயமாக்கும் திட்டம் குறித்த கையேடை கலெக்டர் வெளியிட்டார். அதனை விவசாயிகள் பெற்றுக்கொண்டனர்.


Next Story