போலி இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி புதுவை ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.88 லட்சம் மோசடி
போலி இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி புதுவை ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.88 லட்சம் மோசடி செய்த வழக்கில் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி,
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் பவிசி ஓரா(வயது 44). புஸ்சி வீதியில் வசித்து வரும் இவர் புதுவை நேரு வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பவிசி ஓராவை சிலர் போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள், மத்திய அரசின் சிறப்பு இன்சூரன்ஸ் திட்டத்தில் தாங்கள் பணிபுரிந்து வருவதாக கூறினர்.
நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்தால் ரூ.2 கோடி வரை கடன் வாங்க முடியும் என்றும், கட்டிய தொகை முதிர்வு வரும் போது வட்டியுடன் சேர்ந்து இருமடங்காக கொடுக்கப்படும் என்றும் அவரிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதனை உண்மை என்று நம்பிய பவிசி ஓரா, அந்த நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஆன்–லைன் மூலம் பல தவணைகளாக ரூ.88 லட்சம் வரை அனுப்பியுள்ளார். இதற்கிடையே அவரது ஜவுளிக்கடையில் வியாபாரம் நலிவடைந்தது. எனவே அவரால் பிரீமியம் தொகையை செலுத்த முடியவில்லை. இந்தநிலையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இதுவரை செலுத்திய பிரீமியம் தொகையை திரும்ப வாங்கலாம் என முடிவு செய்தார்.
இதற்காக அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு செலுத்திய பணத்தை திரும்பத் தரும்படி பிவிசி ஓரா கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து விசாரணை நடத்தியபோது அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் போலியானது என்பதும் ரூ.88 லட்சம் மோசடி செய்யப்பட்டு இருப்பதையும் அறிந்து பிவிசி ஓரா அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சந்தீப்சர்மா, வினோத்கபூர், ஆர்.கே. ரண்ட்வா, ராமச்சந்திரசிங் திஷாக் ஆகியோர் போலியாக இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு அவர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதே போல் மேலும் பலரிடம் அவர்கள் மோசடி செய்திருக்கலாம் என்று தெரிகிறது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.