சிறுமிக்கு பாலியல் தொல்லை நடந்த பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


சிறுமிக்கு பாலியல் தொல்லை நடந்த பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2018 3:45 AM IST (Updated: 1 Sept 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு வேன் டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் உள்ள புங்கம்பேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் படித்து வந்த சிறுமிக்கு கடந்த 28-ந் தேதி இதே பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றும் பால்பாண்டி (வயது 30) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பள்ளிக்கும் கடந்த 2 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த பொன்னேரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், பாலசுப்பிரமணி, பொன்னேரி தாசில்தார் கார்த்திகேயன், மாவட்ட கல்வி அலுவலர் இளம்பரிதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

அவர்கள் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியரின் கவனக்குறைவே இச்சம்பவத்திற்கு காரணம். எனவே தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகியோரை கைது செய்ய வேண்டும்.

அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story