உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தலைமையில் தேனியில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் நேற்று வந்தார். அங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் பங்கேற்ற முன்னோடி ஆய்வுக்கூட்டத்தை அவர் தலைமை தாங்கி நடத்தினார். வாக்காளர் பட்டியல், வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பாக வரப்பெற்ற மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் கையேடு 3-ல் திருத்தம் அறிவுறுத்தப்பட்டதின் அறிக்கை விவரம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சட்டமுறையான மற்றும் சட்ட முறை சாரா படிவங்கள் மற்றும் இதர தேர்தல் குறித்த விவரம், வாக்குச்சாவடி எண்ணிக்கைகளின் விவரம் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள், பயன்படுத்தப்படாமல் மீதமுள்ள வாக்குச்சீட்டுகள், பதிவேடுகள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக ஆய்வுக்கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் பேசும் போது கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 6 நகராட்சிகளில் 177 வார்டுகள், 22 பேரூராட்சிகளில் 336 வார்டுகள் என மொத்தம் 513 வார்டுகள் உள்ளன. அதேபோல், ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் என மொத்தம் 1,912 பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 987 கட்டுப்பாட்டுக் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த தேர்தலின் போது கட்சி சார்பற்ற பயன்படுத்தப்படாத வாக்குச்சீட்டுகள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து கையேடுகள், சட்ட முறையிலான படிவங்கள், சட்ட முறை சாரா படிவங்கள் ஆகியவற்றில் பத்து பிரதிகள் மட்டும் ஆவணப் பார்வைக்காக இருப்பு வைக்கப்பட்டு, மீதமுள்ளவற்றை துண்டுகளாக்கி கழிவு செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, தமிழ்நாடு மாநில தேர்தல் பிரிவு உதவி இயக்குனர் சம்பத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story