105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 75 சதவீத வாக்குகள் பதிவானது 3-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
மைசூரு மாநகராட்சி உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. இந்த தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவானது.
பெங்களூரு,
மைசூரு மாநகராட்சி உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. இந்த தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
கர்நாடகத்தில் மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகள் உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்டு 31-ந் தேதி (அதாவது நேற்று) தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆர்வமாக வந்து வாக்களித்தனர்
இந்த தேர்தலில் 2,634 வார்டுகளுக்கு 9 ஆயிரத்து 121 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 29 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கலபுரகி, சாம்ராஜ்நகர் ஆகிய 2 மாவட்டங்களில் 2 வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் 105 நகர உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டப்படி நேற்று நடைபெற்றது. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக சுமார் 5,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மதியம் வரை சுமார் 50 சதவீத வாக்குகள் பதிவாயின.
தொழில்நுட்ப கோளாறு
மண்டியா, நாகமங்களா, ஹாவேரியில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது. அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். மைசூரு அரவிந்த்நகர் 64-வது வார்டு வாக்குச்சாவடி எண் 11-ல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து, ஓட்டுப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைந்து வந்து அந்த கோளாறை சரிசெய்தனர். சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகே அந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதனால் ஓட்டுப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று அங்கு காத்திருந்த வாக்காளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதே போல் மைசூருவில் உள்ள வாக்குச்சாவடி எண் 19-ல் வாக்காளர்கள் வாக்குச்சாவடி குறித்து சிறிது குழப்பம் அடைந்தனர். ஹாசன் வாக்குச்சாவடி எண் 2-ல் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண் மாறி இருந்தது. இதற்கு வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அச்சிடும்போது தவறு நிகழ்ந்துவிட்டதாக அந்த பகுதி தாசில்தார் விளக்கமளித்தார். மண்டியா வாக்குச்சாவடி எண் 21-ல் புதுமண தம்பதியான கிருஷ்ணா-பல்லவி ஆகியோர் காலையில் திருமணம் முடிந்ததும் மணக்கோலத்திலேயே வந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இது அனைவரையும் வியப்படைய செய்தது.
பூஜை செய்து வழிபட்டனர்
காலை ஓட்டுப்பதிவு தொடங்கியதும் பல பகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களுக்கே வெற்றி கிடைக்க வேண்டும் என்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர். யாதகிரியில் வாக்குச்சாவடி எண் 28-ல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து ஓட்டுப்பதிவு சிறிது நேரம் தாமதமாக தொடங்கியது.
பீதர் ஹள்ளிகேட் புரசபையில் 14-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் முகமது ஆசிப் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக வந்த புகாரை அடுத்து போலீசார் விரைந்து வந்து, காங்கிரஸ் வேட்பாளரை பிடித்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அவரது ஆதரவாளர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மோட்டார் சைக்கிளில் பெலகாவி மாவட்டம் கோகாக்கில் வாக்குச்சாவடி எண் 33-க்கு வந்தார். அங்கு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை. இதையடுத்து அவர் திரும்பினார். பின்னர் வாக்குச்சாவடி எண் 34-க்கு சென்ற அவர் அங்கு தனது பெயர் இருந்ததை அடுத்து வாக்களித்தார். பகல் 3 மணி நிலவரப்படி சுமார் 60 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன. சிறிய சம்பவங்களை தவிர்த்து இந்த உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மழை வெள்ளம் காரணமாக குடகு மாவட்டத்தில் 3 பட்டண பஞ்சாயத்துகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தனித்து போட்டியிட்டு உள்ளன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் வருகிற 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் வாக்குச்சாவடிகளில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டு, ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன. அந்த ஓட்டு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story