சரக்கு-சேவை வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர மாநில அரசுகள் எதிர்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


சரக்கு-சேவை வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர மாநில அரசுகள் எதிர்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 31 Aug 2018 11:00 PM GMT (Updated: 31 Aug 2018 9:26 PM GMT)

சரக்கு-சேவை வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திண்டுக்கல், 

பா.ஜனதா கட்சி நிர்வாகி ஒருவரது இல்ல திருமண விழா திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என எதுவாக இருந்தாலும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பா.ஜனதா கட்சி யாரையும் மிரட்டுவது இல்லை. தாழ்வு மனப்பான்மையால் சில கட்சியினர் மிரண்டு உள்ளனர். அனைத்து கட்சிகளுடன் நட்போடு இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதும், கலைஞரை போன்று தனக்கு சில விஷயங்கள் இல்லை என்று கூறினார். அதை நிரூபிக்கும் வகையில் அவருடைய பேச்சு அமைந்தது, துரதிருஷ்டவசமானது. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டமாகவே தெரிந்தது. இது கருணாநிதிக்கு செய்த மிகப்பெரிய துரோகம். கருணாநிதியை அவமானப்படுத்தி உள்ளனர்.

ஒரு இரங்கல் கூட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பா.ஜனதா கட்சி நடத்திய இரங்கல் கூட்டம் உதாரணம். பா.ஜனதா கட்சியிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். பணமதிப்பு இழப்பு தொடர்பாக ஒரு பொய்யை திரும்ப, திரும்ப சொல்லி உண்மையாக்க முடியும் என்று ராகுல்காந்தி நம்புகிறார். அது நிச்சயமாக எடுபடப் போவது இல்லை.

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால், பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்களும் பயன் அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசலால் மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கிறது. எனவே, சரக்கு-சேவை வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டாம் என்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு அரசு தயாராக இல்லை. இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story