நத்தத்தில் நுகர்பொருள் வாணிப குடோனில் தீ
நத்தத்தில், நுகர்பொருள் வாணிப குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
நத்தம்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன் உள்ளது. இங்கு ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை குடோனை ஒட்டிய வெளிப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து நத்தம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் களம் இறங்கினர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த வேப்ப மரம் மட்டும் கருகியது.
தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் குடோனில் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. குடோன் பகுதியில் கிடந்த கழிவுகளுக்கு மர்ம நபர்கள் யாரோ தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story