குடகு மாவட்டத்தில் தொடர் மழையால் மக்கள் பீதி சாலைகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்
குடகு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இருப்பினும் சாலைகள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குடகு,
குடகு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இருப்பினும் சாலைகள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சாலைகள் சேதம்
குடகு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கோரதாண்டவமாடியது. கடந்த 13-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தொடர்ந்து கொட்டி தீர்த்த கனமழைக்கு மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடானது. மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் மீது விழுந்தன. காவிரி கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உறவுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதுதவிர மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை, மடிகேரி-விராஜ்பேட்டை, மடிகேரி-ஹாசன், மடிகேரி-குசால்நகர், மடிகேரி-பாகமண்டலா ஆகிய சாலைகளும் மண்அரிப்பு, நிலச்சரிவால் சேதமடைந்தன. இதனால் கடந்த 12 நாட்களாக குடகு மாவட்டத்தில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். ஆனால் வெள்ளத்தில் வீட்டில் இருந்த பொருட்கள், துணிமணிகள் அடித்துச்செல்லப்பட்டு விட்டன. இதனால் அவர்கள் பரிதவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் துணிமணிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அரசும், தன்னார்வ அமைப்பினரும் வழங்கி வருகிறார்கள். மேலும் வீடுகள் இடிந்ததால் தங்க இடமில்லாமல் 1,500-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கியிருந்து வருகிறார்கள்.
சீரமைப்பு பணிகள் தீவிரம்
மழையின் கோரதாண்டவத்தில் முற்றிலும் உருக்குலைந்துபோன குடகு மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மாநில அரசு சார்பில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு குடகு மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின்வினியோகம் கொடுக்கும் பணி நடந்தது. அதையடுத்து சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. முக்கிய சாலையான மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு பலத்த சேதமடைந்துள்ளது. அந்த சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மண், பாறைகள், மரம், செடிகள் அகற்றப்பட்டு வருகிறது. மண் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் மண்மூட்டைகளை அடுக்கிவைத்து சீரமைக்கும் பணியும் நடக்கிறது.
கனமழைக்கு சோமவார்பேட்டை தாலுகா நெல்லுதிக்கேரி- கும்பாரகொண்டிசெல்லும் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை உடனே சீரமைத்து கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மழையின் கோரதாண்டவத்திற்கு 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களது உடல்களை தேடும் பணி ஹெலிகேமராக்கள் உதவியுடன் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டு மணலில் மூழ்கிய குடியிருப்பு பகுதிகளிலும் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
மினி பஸ்கள் இயக்கம்
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடகு மாவட்டத்தில் போக்குவரத்து முடங்கிபோய் உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மடிகேரியில் உள்ள கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து தற்போது 10 மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது மடிகேரி-ஆலேறி-மக்கந்தூர்-மாதாபுரா- சோமவார்பேட்டை-பெங்களூரு, சுண்டிகொப்பா-மாதாபுரா- பெங்களூரு, மடிகேரி-மேக்கேரி- விராஜ்பேட்டை-கோணிகொப்பா- உன்சூர், மடிகேரி-பாகமண்டலா- கரிகே-பானத்தூர்-சுள்ளியா உள்ளிட்ட 10 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் கடந்த 15 நாட்களாக வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடந்த மக்கள் இந்த மினி பஸ்கள் மூலம் வெளியூர் செல்ல தொடங்கியுள்ளனர். இந்த மினி பஸ்கள் தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா தெரிவித்தார்.
5-வது நாளாக தொடர் மழை
மழை வெள்ளம்-நிலச்சரிவால் உருக்குலைந்த குடகில் மீட்பு- நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக குடகு மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. 5-வது நாளாக நேற்றும் மடிகேரி, மக்கந்தூர், நாபொக்லு, முக்கொட்லு, கல்லூர், ஜோடுபாலா, பாகமண்டலா, தலைக்காவிரி, சுண்டிகொப்பா, கோணிகொப்பா, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால் அந்தப் பகுதி மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடகு மாவட்ட மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாமல் சாலை சீரமைப்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.
மழை அளவு விவரம்
குடகு மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு:-
மடிகேரி-6.6 மி.மீ, பாகமண்டலா-24.2 மி.மீ, நாபொக்லு-10.3 மி.மீ., சம்பாஜே- 13.8 மி.மீ, சோமவார்பேட்டை-7 மி.மீ., கூடல்பேட்டை-3.1 மி.மீ, குசால்நகர்-4.8 மி.மீ, சனிவாரசந்தே-6 மி.மீ, சாந்தஹள்ளி-8 மி.மீ, சுண்டிகொப்பா-6.6 மி.மீ, விராஜ்பேட்டை-8.5 மி.மீ, அம்மத்தி-6.6 மி.மீ, பாலலே-7.4 மி.மீ, உதிக்கேரி-8.1 மி.மீ, பொன்னம்பேட்டை-8 மி.மீ, ஸ்ரீமங்களா-8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story