செல்போனை திருடன் பறித்ததால் ரெயிலில் இருந்து குதித்தபோது பலி கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது
கல்வாவில் ரெயிலில் இருந்து தவறிவிழுந்தவர் பலியான சம்பவத்தில் அவரிடம் செல்போன் பறித்த வாலிபர் ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம் போலீசில் சிக்கியுள்ளார்.
மும்பை,
கல்வாவில் ரெயிலில் இருந்து தவறிவிழுந்தவர் பலியான சம்பவத்தில் அவரிடம் செல்போன் பறித்த வாலிபர் ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம் போலீசில் சிக்கியுள்ளார்.
நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகள்
நாசிக்கை சேர்ந்தவர் சேட்டன் அகேராவ்(வயது35). இவர் கடந்த 19-ந்தேதி கல்வா ரெயில்நிலையம் 1-வது பிளாட்பாரம் அருகே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். முதலில் போலீசார் சேட்டன் அகேராவ் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என நினைத்தனர். எனினும் அவரது செல்போன் மாயமாகி இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே போலீசார் கல்வா ரெயில்நிலையம் 1-வது பிளாட்பாரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சி களைஆய்வு செய்தனர். அப்போது, அதில் பதிவாகி இருந்த காட்சிகள் நெஞ்சை உறையவைக்கும் வகையில் இருந்தது.
செல்போன் பறித்த வாலிபர்
சம்பவத்தன்று நள்ளிரவு 12.54 மணிக்கு சேட்டன் அகேராவ் கல்வா ரெயில் நிலையம் 1-வது பிளாட்பாரம் வழியாக மின்சார ரெயிலில் செல்கிறார். இதில், அவர் வாசலில் நின்று செல்போனை பயன்படுத்தியபடி சென்று கொண்டு இருக்கிறார். அப்போது பிளாட்பாரத்தில் நிற்கும் வாலிபர் ஒருவர் சேட்டன் அகேராவின் கையில் இருக்கும் செல்போனை தட்டி விடுகிறார். இதில் செல்போன் பிளாட்பாரத்தில் விழுந்து விடுகிறது.
செல்போனை எடுக்க சேட்டன் அகேராவ் ஓடும் ரெயிலில் இருந்து பிளாட்பாரத்தில் குதிக்கிறார். ஆனால் அதற்குள் ரெயில் பிளாட்பாரத்தை தாண்டிவிடுவதால் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைகிறார்.
கைது
சேட்டன் அகேராவ் கீழே விழுந்ததை செல்போன் பறித்த வாலிபர் பாா்க்கிறார். பின்னர் அந்த வாலிபர் அவர் விழுந்து கிடந்த இடம் வரை செல்கிறார். அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் கிடக்கிறார். எப்படியும் அவர் பிழைக்க மாட்டார் என்பது தெரிந்ததும் அந்த வாலிபர் சேட்டன் அகேராவின் செல்போனை எடுத்துவிட்டு அங்கு இருந்து தப்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த செல்போன் திருடனை வலைவீசி தேடிவந்தனர். விசாரணையில், அவர் கல்வா ரெயில்நிலையம் அருகே உள்ள குடிசைப்பகுதியை சேர்ந்த அஜய் சோலங்கி (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குடிசை பகுதிக்கு சென்ற போலீசார் செல்போன் திருடன் அஜய் சோலங்கியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story