திருச்சியில் கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


திருச்சியில் கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Sept 2018 4:03 AM IST (Updated: 1 Sept 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

கடைமடைக்கு காவிரி நீர் வராததை கண்டித்து கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கலெக்டர் ராஜாமணி, காரில் வளாகத்தில் வந்து இறங்கினார். அப்போது, அவரை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் பூ.விசுவநாதன் தலைமையிலான விவசாயிகள் முற்றுகையிட்டதுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென மேல் சட்டையின்றி அரை நிர்வாண கோலத்தில் படிக்கட்டில் படுத்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது கைகளில் விதை நெல் பைகள் மற்றும் மண் வெட்டிகளையும் எடுத்து வந்திருந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டர் ராஜாமணி, எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள்? என கேட்டார். அதற்கு விவசாயிகள் தரப்பில்,“விதை நெல் வாங்கி விட்டோம். ஆனால், நாற்றுப்போட முடியவில்லை. காரணம் வாய்க்காலில் கடைமடைவரை காவிரி தண்ணீர் வரவில்லை. ஏரிகளிலும் எதிர்பார்த்த அளவு தண்ணீர் இல்லை. ஆனால், கொள்ளிடம் ஆற்றில் உபரியாக தண்ணீர் சென்று கடலில் கலந்தது. எனவே, வாய்க்கால் மற்றும் ஏரிகளில் உடனடியாக காவிரி தண்ணீர் திறந்து விட வேண்டும் என் பதற்காக நடத்துகிறோம்” என்றனர்.

அதை கேட்ட கலெக்டர், இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி விட்டு, குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க சென்றார். அதே வேளையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவோம் என கோஷம் எழுப்பினார்கள்.

மேலும் கலெக்டர் செல்லும் வழியில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் அலுவலகம் முன்பு அங்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தண்ணீர் தேங்கி அழுகிய நெல்பயிருடன் கலெக்டர் ராஜாமணியை சிலர் முற்றுகையிட்டனர்.

அப்போது அய்யாக்கண்ணு கூறுகையில், “காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தினையும், மேட்டூர்-அய்யாறு திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். அப்படியானால்தான் வெள்ளநீர் பாதிப்பை குறைக்க முடியும். வடகரை வாய்க்கால் தலைப்பை மாயனூக்கு மாற்ற வேண்டும். அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் திறந்து விட்டு ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும். இதனை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செய்யவில்லை. தொட்டியம்-முள்ளப்பாடி வாய்க்காலில் தண்ணீர் இதுவரை வரவில்லை” என்றார். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.

Next Story