காதல் தகராறில், ஆற்றில் குதித்த கல்லூரி மாணவியின் கதி என்ன? காப்பாற்ற முயன்ற மாணவர் உயிருடன் மீட்பு


காதல் தகராறில், ஆற்றில் குதித்த கல்லூரி மாணவியின் கதி என்ன? காப்பாற்ற முயன்ற மாணவர் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 1 Sept 2018 5:20 AM IST (Updated: 1 Sept 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், காதல் தகராறில் கல்லூரி மாணவி ஆற்றில் குதித்தார். அவரது கதி என்ன? என்று தெரியவில்லை. மாணவியை காப்பாற்ற முயன்ற மாணவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 21 வயது நிரம்பிய மாணவி ஒருவர் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்த மாணவர் ஒருவரும் காதலித்து வந்தனர். நேற்று காலை காதலர்கள் இருவரும் கல்லூரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். இருவரும் நெய்வாய்க்கால் அருகே நத்தம்படிப்பட்டி ஆற்றுப்பாலம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மாணவி திடீரென பாலத்தில் இருந்து கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் புது ஆற்றில் குதித்தார்.

இதை சற்றும் எதிர்பாராத அவரது காதலர், தனது காதலியை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்தார். ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த மாணவி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அந்த மாணவர், ஆற்றின் நடுவே வளர்ந்து இருந்த செடி ஒன்றினை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் ஆற்றின் கரையோரம் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இருவரையும் காப்பாற்ற ஆற்றில் இறங்கினர். மேலும் இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கும், தஞ்சை தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தஞ்சை தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி அந்த மாணவரை மட்டும் மீட்டனர்.

ஆனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அந்த மாணவியின் கதி என்ன? என்று தெரியவில்லை. தீயணைப்பு படையினர் தொடர்ந்து மாலை வரையிலும் தீவிரமாக தேடினர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால் தீயணைப்பு படையினரால் தேடுதல் பணியை தொடர முடியவில்லை. அவர்கள் ஆற்றில் இருந்து திரும்பி விட்டனர். இன்று காலை மீண்டும் தீயணைப்பு படையினர் மாணவியை தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தகராறில், கல்லூரி மாணவி ஆற்றில் குதித்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story