அரசு ஊழியர்கள் பதவி உயர்வின்போது ‘மகப்பேறு விடுமுறை நாட்களை பணிக்காலமாக கருத வேண்டும்’
அரசு ஊழியர்கள் பதவி உயர்வின் போது மகப்பேறு விடுமுறை நாட்களை பணிக்காலமாக கருத வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
திருச்சியில் வட்டாட்சியராக பணிபுரிந்து வரும் ரேணுகா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
கடந்த 2001–ம் ஆண்டு வருவாய்த்துறையில் உதவியாளராக நியமிக்கப்பட்டேன். 2007–08–ம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் எனது பெயரை சேர்க்கவில்லை. உரிய நேரத்தில் 5 ஆண்டு பயிற்சி காலத்தை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி நிராகரித்து விட்டனர். பயிற்சி காலத்தின்போது மகப்பேறு விடுப்பில் சென்றதால் குறிப்பிட்ட நேரத்தில் 5 ஆண்டு பயிற்சியை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே மகப்பேறு விடுப்பு காலத்தையும் பணிக்காலமாக கருதி எனக்கு உரிய பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.விஸ்வலிங்கம் ஆஜராகி, ‘‘அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016–ல் அரசு ஊழியர்கள் விடுமுறையில் செல்வது அவர்களின் பதவி உயர்வுக்கு ஒரு தடையல்ல என்று கூறப்பட்டுள்ளது’’ என்றார்.
விசாரணை முடிவில், அரசு ஊழியர்கள் 5 ஆண்டு பயிற்சி காலத்தை நிறைவு செய்யவும், பதவி உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கும்போதும் அவர்களின் விடுமுறை காலத்தையும் பணிக்காலமாக கருத வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதே சட்டத்தை பின்பற்றி ஒருவருக்கு பதவி உயர்வு வழங்க வருவாய் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் மனுதாரர் கோரிக்கையை ஏற்பதில் முரண்பட்ட நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் பெயரை 2008–ம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்த்து பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களை 6 வாரத்தில் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.