வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10 தொகுதிகளில் 25 லட்சத்து 16 ஆயிரத்து 614 வாக்காளர்கள்


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10 தொகுதிகளில் 25 லட்சத்து 16 ஆயிரத்து 614 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 2 Sept 2018 4:15 AM IST (Updated: 1 Sept 2018 6:44 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் வரைவு வாக்காளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 10 தொகுதிகளில் மொத்தம் 25 லட்சத்து 16 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

மதுரை,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1–ந் தேதியை தகுதி நாளாக கொண்டு நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே அதனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர், திருப்பரங்குன்றம், சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 10 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் நடராஜன் நேற்று வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மொத்தம் 25 லட்சத்து 16 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 12 லட்சத்து 44 ஆயிரத்து 739. பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 71 ஆயிரத்து 765. இதர (திருநங்கைகள்) வாக்காளர்கள் 110 ஆகும். ஆண் வாக்காளர்களை விட 27 ஆயிரத்து 26 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

இந்த வரைவு பட்டியல் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெயர் சேர்க்க, முகவரி மாற்ற, திருத்தம் செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 31–ந் தேதி வரை மனு கொடுக்கலாம்.

இந்த மனுவுடன் முகவரி ஆதாரத்தை இணைக்க வேண்டும். 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் வயதுக்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும். பெறப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். இந்த இறுதி பட்டியல் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் 4–ந் தேதி வெளியிடப்படும். வரைவு பட்டியலில் பெயர் சேர்க்க வருகிற 9 மற்றும் 23–ந் தேதியும், அடுத்த மாதம் (அக்டோபர்) 7 மற்றும் 14–ந் தேதியும் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன், தேர்தல் பிரிவு தாசில்தார் உதயசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். அப்போது தி.மு.க., தே.மு.தி.க, கம்யூனிஸ்டு கட்சி பிரதிநிதிகள் பேசும் போது, ‘‘தேர்தல் பணிகளில் கலெக்டர் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் நடுநிலையாக இருக்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் போதிய அளவில் விண்ணப்பங்கள் வைத்து இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக உதவியாளர் ஒருவரை பணி அமர்த்த வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் எந்த தெருவின் வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர் என்பதனை குறிக்கும் விதமாக அந்த தெருக்களின் பெயரை எழுதி வைக்க வேண்டும்‘‘ என்றனர்.

அதற்கு பதிலளித்து பேசிய கலெக்டர் நடராஜன், ‘‘கடந்த 2002–ம் ஆண்டு முதல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். எனவே அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் தெரியும். எனவே அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணி மட்டுமின்றி அனைத்து பணிகளிலும் நேர்மையாக இருப்பேன். அது குறித்து யாரும் சந்தேகப்பட வேண்டாம்‘‘ என்றார்.

வாக்காளர்களுக்கு சேவை அளிப்பதற்காக, தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in என்ற இணையதளம் உள்ளது. இந்த இணையதளத்தில், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதனை பொதுமக்கள் எளிதாக பார்த்து கொள்ளலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும், முகவரி மாற்றவும் செய்யவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி, வாக்காளர்கள் எந்த வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டளிக்க வேண்டும், தங்கள் தொகுதிக்கான தேர்தல் அலுவலர்கள் யார் என்பதனையும் தெரிந்து கொள்ளலாம். வாக்காளர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் இந்த இணையதளம் ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே உள்ளது. அதில் தமிழ் இல்லை என்பது தான் நமக்கு வருத்தமான வி‌ஷயம். தமிழ் இல்லாததால் ஆங்கில மொழியில் தான் நாம் விண்ணப்பிக்க முடியும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வருகிற 8 மற்றும் 22–ந் தேதியும், அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 13–ந் தேதியும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்படும். மேலும் அங்கு பெயர் சேர்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் மனு கொடுக்கலாம். நகர்புறங்களில் கிராமசபை கூட்டத்திற்கு பதிலாக நலசங்கங்களின் கூட்டம் நடத்தப்படும். அதில் தேர்தல் பூத் அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.

வண்ண வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படுபவர்கள், அரசு இ–சேவை மையங்களில் ரூ.25 கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். அந்த அடையாள அட்டையில் பழைய கருப்பு வெள்ளை படத்திற்கு பதிலாக தற்போதைய கலர்புகைப்படம் வேண்டும் என்றால் படிவம்–8ஏ கொடுக்க வேண்டும். இந்த மனு பரீசிலனை செய்து ஏற்றுக்கொள்ளப்பட்டால், அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 4–ந் தேதிக்கு பிறகு புதிய கலர் படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை இ–சேவை மையத்தில் பெற்று கொள்ளலாம்.


Next Story