திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர்கள் வரைவு பட்டியல் வெளியீடு
திருப்பூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 21 லட்சத்து 71 ஆயிரத்து 477 வாக்காளர்கள் இருப்பதாக கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கேயம், பல்லடம், அவினாசி, தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
வருகிற 2019–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நகல் அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது. இதில் பரமராஜன்(அ.தி.மு.க.), டி.கே.டி.மு.நாகராஜன்(தி.மு.க.), பி.ஆர்.நடராஜன்(இந்திய கம்யூனிஸ்டு), நந்தகோபால்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), செல்வக்குமார்(தே.மு.தி.க.) உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:–
வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தாராபுரம்(தனி) சட்டமன்ற தொகுதியில் 297 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆண்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 109 பேரும், பெண்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 853 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 970 வாக்காளர்கள் உள்ளனர். காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 17 ஆயிரத்து 904 ஆண்கள், 1 லட்சத்து 22 ஆயிரத்து 388 பெண்கள், 21 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 40 ஆயிரத்து 313 வாக்காளர்கள் உள்ளனர். அவினாசி(தனி) சட்டமன்ற தொகுதியில் 312 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 26 ஆயிரத்து 865 ஆண்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 86 பெண்கள், 22 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 57 ஆயிரத்து 973 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 362 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 75 ஆயிரத்து 637 ஆண்கள், 1 லட்சத்து 66 ஆயிரத்து 152 பெண்கள், 86 மூன்றாம் பாலினத்தவர் என 3 லட்சத்து 41 ஆயிரத்து 875 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 233 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 29 ஆயிரத்து 734 ஆண்கள், 1 லட்சத்து 24 ஆயிரத்து 942 பெண்கள், 28 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 54 ஆயிரத்து 704 வாக்காளர்கள் உள்ளனர். பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 406 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 75 ஆயிரத்து 601 ஆண்கள், 1 லட்சத்து 73 ஆயிரத்து 308 பெண்கள், 40 மூன்றாம் பாலினத்தவர் என 3 லட்சத்து 48 ஆயிரத்து 949 வாக்காளர்கள் உள்ளனர்.
உடுமலை சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 21 ஆயிரத்து 617 ஆண்கள், 1 லட்சத்து 28 ஆயிரத்து 729 பெண்கள் 22 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 50 ஆயிரத்து 368 வாக்காளர்கள் உள்ளனர். மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1 லட்சத்து 14 ஆயிரத்து 388 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 919 பெண்கள், 18 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 31 ஆயிரத்து 325 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 482 வாக்குச்சாவடிகள் உள்ளன. 10 லட்சத்து 82 ஆயிரத்து 855 ஆண்கள், 10 லட்சத்து 88 ஆயிரத்து 377 பெண்கள், 245 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 21 லட்சத்து 71 ஆயிரத்து 477 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான மனுக்கள் அளிப்பதற்கு வருகிற அக்டோபர் மாதம் 31–ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 8–ந் தேதி, 22–ந் தேதி, அடுத்த மாதம்(அக்டோபர்) 6–ந் தேதி, 13–ந் தேதி ஆகிய நாட்கள் கிராம சபை கூட்டங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்க கூட்டங்களின் மூலமாக வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்துக்கொள்ளலாம். இதுதவிர வருகிற 9–ந் தேதி, 23–ந் தேதி, அடுத்த மாதம் 7–ந் தேதி, 14–ந் தேதி ஆகிய நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது.
வரைவு வாக்காளர் பட்டியல்கள் அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களான திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், திருப்பூர் சப்–கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்து தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாதனைக்குறள், தாசில்தார்கள் முருகதாஸ்(தேர்தல்), ஜெயக்குமார்(திருப்பூர் வடக்கு), ரவிச்சந்திரன்(திருப்பூர் தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சரிபார்க்க, திருத்தம் செய்ய புதிய வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென NVSP என்ற புதிய செயலி (APP) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடுவதன் மூலம் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? என்பதைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியாதவர்கள் கூட தங்களது பெயர், தந்தை பெயர், முகவரி போன்ற விவரங்களையும் பதிவிடுவதன் மூலம் அடையாள அட்டை எண்ணை தெரிந்து கொள்ள முடியும். அத்துடன் திருத்தங்கள் மேற்கொள்ளவும் முடியும். இந்த NVSP என்ற செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.