புஞ்சைபுளியம்பட்டி அருகே கூட்டுறவு சங்க தேர்தல்: அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே நொச்சிக்குட்டையில் தொடக்க வேளாண்மை சங்க உள்ளது. இந்த சங்கத்தில் 11 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலுக்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த 44 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 14 பேர் வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.
மீதமுள்ள 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மொத்தம் 23 வேட்பாளர்கள் 11 நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை சங்க அலுவலகத்தில் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. வாக்காளர்கள் வாக்களித்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் திடீரென அ.தி.மு.க.வை சேர்ந்த மூர்த்தி என்பவரது தலைமையில் கட்சியினர் 20 பேர் புஞ்சைபுளியம்பட்டி–திருப்பூர் சாலையில் திடீரென ஒன்று கூடினார்கள்.
பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘வாக்காளர்கள் துண்டு சீட்டில் எண்களை குறித்து வைத்துக்கொண்டு வாக்களிக்கிறார்கள். அவ்வாறு வாக்களிக்க கூடாது’ என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு போலீசார், ‘வயதானவர்களுக்காக இவ்வாறு நடத்தப்பட்டது’ என்று கூறினர். அதை ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க.வினர் சாலை மறியலை அங்கிருந்து கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் புஞ்சைபுளியம்பட்டி–திருப்பூர் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.