அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்துகிறார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி


அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்துகிறார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
x
தினத்தந்தி 2 Sept 2018 5:00 AM IST (Updated: 1 Sept 2018 9:57 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்துகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க.வுக்கு வாரிசு அடிப்படையில் மு.க.ஸ்டாலின் தலைவராகி இருக்கிறார். அவர் தற்போது அரசு மீதும், என் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். இரண்டு கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்

உலக பணக்கார வரிசையில் 10–வது இடத்தில் மு.க.ஸ்டாலின் குடும்பம் இருக்கின்றது. அவர்கள் எப்படி அந்த இடத்திற்கு வந்தனர்? இவ்வளவு சொத்து சேர்ந்தது எப்படி?. கலைஞர் டி.விக்கு 200 கோடி ரூபாய் வந்தது எப்படி? என்பதை மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின் வகித்த உள்ளாட்சி துறையில் அவர் செய்த சாதனைகளை விட தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் 3 மடங்கு சாதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் குற்றம் சுமத்தி வருகிறார். ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினிடம் இருந்து இதுபோன்ற அறிக்கையினை எதிர்பார்க்கவில்லை.

எல்.இ.டி. பல்பு கொள்முதலில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை. எல்.இ.டி. பல்பு உள்ளாட்சிகளில் பொருத்தப்பட்டுள்ளதால் 300 கோடி ரூபாய் அளவுக்கு மின்சார கட்டணம் மிச்சமாகி இருக்கிறது. டெண்டர்கள் அனைத்தும் இ–டெண்டர் முறையில் நடைபெறுகிறது. எதிலும் முறைகேடு இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.21 ஆயிரத்து 995 கோடி மதிப்பில் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 4,900 எம்.எல்.டி. குடிநீர்தான் வினியோகம் செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியின்போது கூடுதலாக 2,400 எம்.எல்.டி. குடிநீர் வினியோகம் செய்ய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 47 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் அளவுக்கு சாலைகள் அமைத்துள்ளோம். மழைநீர் வடிகால் திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. இலங்கை தமிழர்களை காப்பாற்ற அவர்கள் எதுவும் செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் தி.மு.க.வுக்குத்தான் தலைவர். தமிழகத்திற்கு அவர் முதல்–அமைச்சர் அல்ல. தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கும் தமிழகம் திடக்கழிவு மேலாண்மையில் முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.

கங்கா நதி சுத்தப்படுத்தும் திட்டத்தில் நாம்தான் பயிற்சி அளிக்கிறோம். மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story