பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்
விலை உயர்வினால் ஏற்படும் பாதிப்பை குறைக்க பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மதுரை,
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது–
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி, சப்ளை மற்றும் விலை நிலவரத்திற்கு ஏற்ப அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதால் பெட்ரோல், டீசலின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி. வரி உடனடியாக அமலாக்கப்படும் என ஜி.எஸ்.டி. வரி அமலாக்கப்பட்ட அன்றே உறுதி அளிக்கப்பட்டது. எனவே மாநில அரசுகளை காரணம் காண்பித்து பெட்ரோலிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி அமலாக்கத்தை தாமதப்படுத்துவது எந்த விதத்திலும் நியாமல்ல.
1 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய,மாநில அரசுகள் 60 சதவீதம் வரி விதிக்கின்றன. இந்த வரிப்பளுவை குறைத்திட மத்திய அரசு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் பெட்ரோல், டீசல் உள்பட அனைத்து பெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். அதற்கு மேல் பெட்ரோல், டீசல் மீது எந்த கூடுதல் வரியையும் மாநில அரசுகள் விதிக்க அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.