தி.மு.க. முப்பெரும் விழா தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் அமையும் - பொன்முடி எம்.எல்.ஏ. பேச்சு


தி.மு.க. முப்பெரும் விழா தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் அமையும் - பொன்முடி எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 2 Sept 2018 5:15 AM IST (Updated: 2 Sept 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் 15–ந் தேதி நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழா தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் அமையும் என்று பொன்முடி எம்.எல்.ஏ. பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் முத்தையன், ஜெயச்சந்திரன், மைதிலிராஜேந்திரன், மாவட்ட மு.க.ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பொன்.கவுதமசிகாமணி, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:–

வருகிற 15–ந் தேதி மாலை விழுப்புரத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் விழா இது. இந்த வாய்ப்பை வழங்கிய மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த விழா வரலாற்றில் இடம்பெறக்கூடிய வகையில் இருக்க வேண்டும். நாம் ஏற்கனவே விழுப்புரத்தில் முப்பெரும் விழாவையும், 2003–ம் ஆண்டு மாநாட்டையும் நடத்தியுள்ளோம். விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் முதன்முதலாக மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அந்த மாநாட்டிற்கு பிறகு தி.மு.க. 2006–ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. அதேபோல் தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் இந்த விழாவிற்கு பின்னர் தமிழக முதல்–அமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார்.

18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறலாம். விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் மட்டுமல்லாமல் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு இந்த முப்பெரும் விழா ஒரு முன்னோட்டமாக இருக்கும். விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் இந்த முப்பெரும் விழாவை நடத்த உள்ளோம். கட்சி நிர்வாகிகள் இன்றுமுதலே தங்கள் பணிகளை தொடங்கி விட வேண்டும். முப்பெரும் விழா எளிமையாகவும், அதே நேரத்தில் எழுச்சியுடனும் இருக்க வேண்டும். இந்த விழா தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story