சர்வர் கோளாறால் டிக்கெட் வழங்குவதில் தாமதம்: ரெயில் மறியலில் ஈடுபட போவதாக பயணிகள் கூறியதால் பரபரப்பு
உடுமலை ரெயில் நிலையத்தில் சர்வர் கோளாறால் டிக்கெட் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் ரெயில் மறியல் ஈடுபட போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மடத்துக்குளம்,
கோவை, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு உடுமலை வழியாக ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதனால் உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பயணிகள் ரெயிலில் பல்வேறு ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். உடுமலை ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் மையம் ஒன்று மட்டுமே உள்ளது. இந்த மையத்தில்தான் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு முன் பதிவு செய்ய வேண்டும். மேலும் பயணிகள் ரெயில்களில் பயணம் செய்யவும் இந்த மையத்தில்தான் டிக்கெட் வழங்கப்படுகிறது.
தினமும் கோவையில் மதுரை செல்லும் பயணிகள் ரெயில் உடுமலைக்கு மாலை 3.45 மணிக்கு வரும். பின்னர் அங்கிருந்து மதுரை புறப்பட்டு செல்லும். இந்த ரெயிலில் பயணம் செய்ய ஏராளமான பயணிகள் நேற்று மதியமே உடுமலை ரெயில் நிலையம் வந்தனர்.
இதையடுத்து டிக்கெட் வாங்க வரிசையில் காத்து நின்றனர். அப்போது சர்வர் கோளாறால் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில் ரெயில் வரும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததாலும், பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் கையால் எழுதியாவது டிக்கெட் கொடுக்குமாறு ரெயில் நிலைய மேலாளரிடம் பயணிகள் கூறினார்கள்.
ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டார். இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட போவதாக பயணிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சர்வர் கோளாறு சரி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நூறுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு உடனடியாக டிக்கெட் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 3.50 மணிக்கு கோவையில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் வந்தது. அதில் ஏறி பயணிகள் பயணம் செய்தனர்.
முன்னதாக பயணிகள் கூறும்போது ‘‘உடுமலை ரெயில் நிலையத்தில் அடிக்கடி சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இது போன்ற நேரங்களில் கையால் எழுதி டிக்கெட் கொடுக்க வேண்டும்’’ என்றனர். ஆனால் ரெயில்நிலைய அதிகாரி கூறும்போது ‘‘ இன்று (நேற்று) மின்தடை என்பதால் யுபிஎஸ் மூலம் மின்சாரம் பெறமுடியவில்லை. உடனடியாக ஜெனரேட்டரை இயக்கி டிக்கெட் கொடுக்க முடிவு செய்தோம். ஆனால் சர்வர் பிரச்சினையால் டிக்கெட் கொடுக்க முடியவில்லை.
உடனே சென்னையை தொடர்பு கொண்டு சர்வர் பிரச்சினை தீர்க்க கூறினோம். அவர்களும் விரைவாக பழுதை நீக்கினார்கள். இதையடுத்து டிக்கெட் கொடுக்கப்பட்டது. மேலும் முன் அனுமதி பெறாமல் கையால் எழுதி டிக்கெட் கொடுக்க வேண்டும் என்றால் உரிய அனுமதி பெற வேண்டும்’’ என்றார்.