புதுவையில் 9½ லட்சம் வாக்காளர்கள்: தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தகவல்
புதுவையில் 9லட்சத்து 48 ஆயிரத்து 332 வாக்காளர்கள் உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2019–ஐ தகுதி பெறும் தேதியாகக் கொண்டு 2019–ம் ஆண்டிற்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப் பணியினை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களின் உரிமைக் கோரிக்கைகள், ஆட்சேபனைகளை, வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் அல்லது உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல் மற்றும் சேர்த்தலுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) 31–ந் தேதி வரை நடைபெறும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 3.1.2019–க்குள் முடிக்க வேண்டும். 4.1.19 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
1.1.2018–ஐ தகுதி பெறும் தேதியாக கொண்டு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் முதல் 1.1.2019 தகுதி பெறும் தேதியாகக் கொண்டு வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியல் வரை தொடர் வாக்காளர் பட்டியல்கள் திருத்த பணியின் மூலம் சேர்க்கப்பட்ட, நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் வருமாறு:–
கடந்த 10.1.2018 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 4 லட்சத்து 51 ஆயிரத்து 557 பேரும், பெண்கள் 5லட்சத்து 2ஆயிரத்து 419 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 86 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 54 ஆயிரத்து 062 பேர் உள்ளனர். இந்த கால கட்டத்தில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்த ஆண்கள் 3,432 பேர், பெண்கள் 4,156 பேர். அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதற்கு ஆட்சேபனை தெரிவித்து ஆண்களில் 3,055 பேருக்கும், பெண்களில் 2,756 பேருக்கும் என மொத்தமாக 5,851 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் 5,814 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று சரிபார்த்தல் மூலமாக வசிக்காத மற்றும் இறந்த ஆண்களில் 3,685 பேரும், பெண்களில் 3,819 பேரும் என மொத்தம் 7,504 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் 9 பேரில் 7 பேர் பெண் வாக்காளர்களாகவும், 2 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் 7,588 பேர் சேர்க்கப்பட்டு, 13,318 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வாக்காளர்கள் எண்ணிக்கை 5,730 குறைந்து, இறுதி வாக்காளர்கள் பட்டியலில் 9 லட்சத்து 48 ஆயிரத்து 332 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 4 லட்சத்து 48 ஆயிரத்து 259பேர். பெண்கள் 4 லட்சத்து 99 ஆயிரத்து 985பேர். மூன்றாம் பாலினத்தவர் 88 பேரும் உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்கு சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (வி.வி.பாட்) எந்திரமும் பயன்படுத்துவதால் வாக்குச்சாவடிகளை மறு சீரமைக்க உத்தரவிட்டது. அதன்படி புதுச்சேரியில் 17 துணை வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட 930 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் தற்போது 970 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களிலும் வி.வி.பாட் பயன்படுத்துவதற்கான எந்திரங்கள் பெல் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு விட்டது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். அவர்கள் பயிற்சி முடித்த உடன் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த திருத்தம் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் சவுத்ரி அபிஜித் விஜய், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார், துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் ஆகியோர் உடனிருந்தனர்.