ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டு மந்திரிகள் மிரட்டுகிறார்கள் எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு
மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்றும், ஒப்பந்ததாரர்களிடம் மந்திரிகள் கமிஷன் கேட்டு மிரட்டல் விடுப்பதாகவும் எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கலபுரகி,
மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்றும், ஒப்பந்ததாரர்களிடம் மந்திரிகள் கமிஷன் கேட்டு மிரட்டல் விடுப்பதாகவும் எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கலபுரகியில் நேற்று பா.ஜனதா மாநில தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆட்சியை கவிழ்க்க நினைக்கவில்லை
மாநிலத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. ஆனால் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறதா? என்பதே மாநில மக்களுக்கு தெரியவில்லை. மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தங்களது மாவட்டத்திற்கு சென்று மக்களை சந்திப்பதே கிடையாது. விதானசவுதாவில் இருந்தே வேலை செய்கிறார்கள். அதிகாரிகளை இடமாற்றம் செய்வதில் தான் மந்திரிகள் கவனம் செலுத்துகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க எந்தவொரு மந்திரிகளும் முன்வருவதில்லை.
முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்று 100 நாட்கள் நிறைவு செய்துள்ளார். இதுவரை எத்தனை முறை வடகர்நாடக மாவட்டங்களுக்கு அவர் வந்துள்ளார். வடகர்நாடக மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் குமாரசாமிக்கு இல்லை. கூட்டணி அரசு பற்றி குறை கூறினால், ஆட்சியை கலைக்க பா.ஜனதா சதி செய்வதாக குமாரசாமி குற்றச்சாட்டு கூறுகிறார். ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா நினைக்கவில்லை. கூட்டணி கட்சி தலைவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டு, தானாகவே இந்த ஆட்சி கலைந்து விடும்.
பொய் குற்றச்சாட்டுகளை...
முதல்-மந்திரி குமாரசாமிக்கும், ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையாவுக்கும் இடையே மறைமுகமாக மோதல் இருந்து வருகிறது. அவர்கள் 2 பேரும், ஒருவருக்கொருவர் முகத்தை கூட பார்த்து பேசுவது கிடையாது. குமாரசாமி, சித்தராமையாவுக்கு இடையே உள்ள மோதலால் கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும். பிரதமர் நரேந்திர மோடி மீது மல்லிகார்ஜுன கார்கே பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மல்லிகார்ஜுன கார்கே கலபுரகி மாவட்டத்தை சேர்ந்தவர் தான். அந்த மாவட்டத்திற்கு இதுவரை என்ன செய்துள்ளார் என்று சொல்ல முடியுமா?.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் பொய் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக பிரபல வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அதனால் மல்லிகார்ஜுன கார்கே தோல்வி அடைவது உறுதி.
கமிஷன் கேட்டு மிரட்டுகிறார்கள்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாய்க்கு வந்ததை பேசுகிறார். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு தான் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. ராகுல்காந்தி பேசுவதை கேட்க மக்கள் தயாராக இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் அபார நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியால் மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.
பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறை ஒப்பந்ததாரர்களிடம், அந்த துறைகளை சேர்ந்த மந்திரிகள் கமிஷன் கேட்டு மிரட்டுகிறார்கள். ஒப்பந்ததாரர்கள் கமிஷன் கொடுக்காத காரணத்தால், அந்த 2 துறைகளிலும் எந்த பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கமிஷன் கொடுத்தால் மட்டுமே பணிகள் நடக்க அனுமதிக்கிறார்கள். ஒவ்வொரு பணிகளுக்கும் குறிப்பிட்ட அளவு கமிஷன் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஒப்பந்ததாரர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story