வெள்ளம்- நிலச்சரிவால் உருக்குலைந்த குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா வர 9-ந்தேதி வரை தடை நீடிப்பு கலெக்டர் ஸ்ரீவித்யா தகவல்
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உருக்குலைந்த குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா வர 9-ந் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீவித்யா தெரிவித்தார்.
குடகு,
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உருக்குலைந்த குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா வர 9-ந் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீவித்யா தெரிவித்தார்.
சாலைகள் சேதம்
குடகு மாவட்டத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழையால் கடந்த 20-ந்தேதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அத்துடன் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் மணல், மரம், செடி, கொடிகள், பாறைகள் விழுந்து வீடுகளை அமுக்கியது. இதில் பல வீடுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதனால் 186 வீடுகள் இடிந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியிருந்து வருகிறார்கள். 240 பாலங்கள் விரிசல் ஏற்பட்டு பலத்த சேதமடைந்துள்ளன.
அதுபோல் மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை, மடிகேரி- குசால்நகர், மடிகேரி-ஹாசன், மடிகேரி- பாகமண்டலா, மடிகேரி-விராஜ்பேட்டை உள்பட முக்கிய சாலைகள் மண் அரிப்பாலும், நிலச்சரிவாலும் சேதமடைந்துள்ளன. இதனால் கடந்த 20-ந்தேதி முதல் இதுவரை அந்த சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் குடகு மாவட்டத்தில் போக்குவரத்து முடங்கி போய் உள்ளது. மாற்றுப்பாதைகளில் அரசு சார்பில் 10 மினிபஸ்கள் தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது.
மறுசீரமைப்பு பணிகள்
இந்த கனமழையால் மடிகேரி தாலுகாவில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இருந்த இடம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து கிடக்கிறது. மேலும் இந்த கனமழைக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காணாமல் போய் உள்ளனர். அவர்கள் இறந்திருக்கலாம் என கருதி அவர்களது உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சேதமடைந்த சாலைகள், பழுதடைந்த பாலங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதுபோல் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட கற்கள், மரக்கட்டைகள் ஆகியவற்றை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.
மேலும் தொற்றுநோய்கள் ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திறந்தவெளி கிணறு மற்றும் குடிநீர் தொட்டிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. அதுபோல் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கும், வெள்ளம் வடிந்ததால் வீடு திரும்பிய மக்களுக்கும் அரசு சார்பில் நிவாரண பொருட்கள், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குடகு மாவட்டத்தை புரட்டிபோட்ட கனமழையால் காபி தோட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பரிதவித்து வருகிறார்கள்.
தொடரும் மழை
குடகு மாவட்டத்தில் தொடர்ந்து மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், பொக்லைன் எந்திரங்கள், லாரிகள் சேதமடைந்த சாலைகளில் சென்று வந்த வண்ணம் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வந்தால் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என கருதி கடந்த 31-ந்தேதி வரை குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா வரை தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வருவதால், மறுசீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள மடிகேரி, விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை ஆகிய 3 தாலுகாக்களிலும் கடந்த 4 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதாவது மடிகேரி, மக்கந்தூர், நாபொக்லு, பாகமண்டலா, ஸ்ரீமங்களா, தலைக்காவிரி, அம்மத்தி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை, சுண்டிகொப்பா உள்பட பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை 5-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதனால் அந்தப் பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளும், மீட்பு பணிகளும் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மடிகேரி பகுதியில் மழை பெய்த போதும் சாலையோரம் இருந்த புதர் செடிகள் அகற்றப்பட்டு மழைநீர் வடிய வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுற்றுலா வர தடை நீடிப்பு
இந்த நிலையில் குடகு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா நிருபர்களிடம் கூறுகையில், குடகு மாவட்டத்தில் மழை வெள்ளம்- நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சாலைகளை சீரமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள், லாரிகள் வந்து சென்ற வண்ணம் உள்ளன. இதனால் குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா வர தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகிற 9-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் குடகிற்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story