சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 4-ம் நிலையில் கான்கிரீட் போடும் பணி நிறைவு


சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 4-ம் நிலையில் கான்கிரீட் போடும் பணி நிறைவு
x
தினத்தந்தி 2 Sept 2018 4:00 AM IST (Updated: 2 Sept 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 4-ம் நிலையில் கான்கிரீட் போடும் பணி நேற்று நிறைவு பெற்றது.

சமயபுரம்,

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கோவிலின் முன்பகுதியான கிழக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடைபெற்று முடிந்தது. மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

ராஜகோபுரம் கட்டுமான பணிகள் தாமதமான நிலையில், முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பரமத்திவேலூரை சேர்ந்த பொன்னர்சங்கர் என்ற உபயதாரர் ராஜகோபுரம் கட்டித்தர முன் வந்தார். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தரை மட்டத்தில் இருந்து 103 அடி உயரம் கொண்டதாக இந்த ராஜகோபுரம் அமைய உள்ளது.

ஸ்தபதிகள் தலைமையில் சுமார் 40 தொழிலாளர்கள் சமயபுரத்திலேயே தங்கியிருந்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜகோபுரத்தின் 3 நிலைகளில் பணிகள் முடிந்து, 4-ம் நிலை கட்டுமான பணி நடைபெற்றது. இந்நிலையில் ராஜகோபுரத்தின் 4-ம் நிலை பணி நிறைவு பெற்று நேற்று கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதற்காக காலையில் மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதற்காக தரை பகுதியில் இருந்து சிமெண்டு, ஜல்லிக்கற்கள் கொண்ட கலவையை லிப்ட் மூலம் தொழிலாளர்கள் ஏற்றிச்சென்றனர். இப்பணியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். கான்கிரீட் போடும் பணி மாலையில் நிறைவுபெற்றது. அனைத்து பணிகளும் நிறைவடைந்தவுடன் இன்னும் ஒரு வருடத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story