காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 Sept 2018 4:30 AM IST (Updated: 2 Sept 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. சுரங்க மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் ஐந்தருவி, மெயின்அருவி, சினிபால்சில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து மெயின் அருவி, சினிபால்சில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 500 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 19 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.11 அடியாக இருந்தது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்து உள்ள சுரங்க மின்நிலையம், அணை மின்நிலையம் வழியாக வெளியேறும். இந்த சுரங்க மின்நிலையம் வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை வெளியேற்றலாம். அணை மின்நிலையம் வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றலாம்.

சுரங்க மின்நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டர்பனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதமே தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் 200 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட சுரங்க மின்நிலையத்தில் தற்போது 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதே போன்று அனல்மின்நிலையத்தில் 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சுரங்க மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 100 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story